வன்முறையை தூண்டி வேடிக்கை பார்த்த ட்ரம்பின் பதவி உடனடியாக பறிபோகிறது?

நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் காரணமாக உலக தலைவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சிக்கி தவிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
வன்முறையை தூண்டி வேடிக்கை பார்த்ததாக, காரசாரமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள ட்ரம்ப், இன்னும் 13 நாள்கள் மட்டுமே ஜனாதிபதியாக பணியாற்றுவார் என இருந்த நிலையில், தற்போது மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயருடன் அரியாணையிலிருந்து அவர் கீழே தள்ளிவிடப்படவுள்ளார்.
ட்ரம்பை பதவியில் இருந்து நீக்க அரசமைப்புச் சட்டத்தில் வழி இருப்பதாகவும், அதை பயன்படுத்த வேண்டும் எனவும் வெர்மான்ட் மாகான குடியரசுக் கட்சி ஆளுநர், தேசிய உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர், என்.ஏ.ஏ.சி.பி. (நேஷனல் அசோசியேஷன் ஃபார் அட்வான்ஸ்மென்ட் ஆஃப் கலர்ட் பீப்புள்) தலைவர் உள்ளிட்டோர் மைக் பென்சை சந்தித்து கோரியுள்ளனர்.
அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட அந்த 25ஆவது திருத்தத்தின் படி, ஜனாதிபதிக்கு அவரது கடமையை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டால் அவரது பொறுப்புகள் வேறொருவருக்கு மாற்றப்படலாம்.
1967ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டதில் இருந்து இந்த சட்டத் திருத்தம் ஒரு முறைகூட பயன்படுத்தப்பட்டதில்லை. ஆனால் இப்படியொரு சரித்திர மாற்றம் நிகழுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அமெரிக்க கலவரம்: இதுவரை நால்வர் உயிரிழப்பு- 52பேர் கைது!
இதனிடையே, அமெரிக்க செனட் சபை அமைந்துள்ள கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதியில் இடம்பெற்ற கலவரத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் 52பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, அமெரிக்காவின் வொஷிங்டன் டிசியில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அவமரியாதையை பார்த்து திகைக்கிறேன்: ட்ரம்ப் குறித்து புஷ் கருத்து
ட்ரம்ப்பின் ஆதரவுக்குழுவினர் நடத்திய வன்முறைக்கு முன்னாள் ஜனாதிபதியும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் பதிவு செய்துள்ளார்.
‘தேர்தல் முடிவுகளை மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் எப்படி எதிர்க்கப்படுகிறது? இது நமது ஜனநாயக குடியரசு கிடையாது. தேர்தலுக்குப் பின்னர் சில அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற நடத்தை மற்றும் நமது அமைப்புகள், சட்ட அமுலாக்கத்துறைகளுக்கு நாம் காட்டும் அவமரியாதையை பார்த்து நான் மிகவும் திகைக்கிறேன்’ என கூறியுள்ளார்.
ட்ரம்பின் மகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைத் தாக்கி, வன்முறையில் ஈடுபடும் குழுவினரை தேசபக்தர்கள் என்று டுவிட்டரில் புகழாரம் சூட்டிய ட்ரம்பின் மகள் இவாங்காவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
எனினும், அவர் எதிர்ப்புகள் அதிகரித்ததையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டு, ‘அமைதியான எதிர்ப்பே தேசபக்தி. வன்முறை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த வன்முறை கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க கலவரம் கவலையளிக்கின்றது: ஐக்கிய நாடுகள் சபை
உலகையே உலுக்கிய நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய சூழ்நிலைகளில், வன்முறையிலிருந்து விலக வேண்டியதன் அவசியத்தையும், ஜனநாயக வழிமுறைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை அரசியல் தலைவர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்குக் கட்டாயம் எடுத்துக்கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தீவிரமடைந்த மோதலால் பதவியை துறந்த அதிகாரிகள்!
நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் தீவிரமடைந்ததற்கு வன்முறைக்கு மத்தியில் வெள்ளை மாளிகையின் துணை ஊடக செயலாளர் சாரா மேத்யூஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதேபோல் முன்னாள் வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநரும், ஊடக செயலாளரும், மெலனியா ட்ரம்பிற்கான தற்போதைய தலைமைத் தலைவருமான ஸ்டீபனி கிரிஷமும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ட்ரம்ப் ஆதரவாளர்களின் வன்முறை போராட்டங்கள்: உலக தலைவர்கள் கண்டனம்!
அமெரிக்காவில் ட்ரம்ப் ஆதரவாளர்களின் வன்முறை போராட்டங்களுக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், இந்திய பிரதமர் மோடி, உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் அமெரிக்காவில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும், ஜனநாயகம் மீண்டும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க செனட் சபை அமைந்துள்ள கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதியில் இடம்பெற்ற கலவரத்தை, பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ‘அவமதிப்பான காட்சிகள்’ என கூறி கண்டித்துள்ளார்.
இறுதியில் பலத்த எதிர்ப்பு- எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதல்
பலத்த எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில், ஜோ பைடன் வெற்றிபெற்றதற்கான வெற்றிச் சான்றிதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜோ பைடன் எதிர்வரும் 20ஆம் திகதி அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.
கடந்த நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் 306 இடங்களிலும் ட்ரம்ப் 232 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.