வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்பு சபையின் கோரிக்கை
In இலங்கை November 17, 2020 4:37 am GMT 0 Comments 1527 by : Dhackshala

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க இலங்கை அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்பு சபை இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு இடைக்கால நீதி நடைமுறைக்கு வழிவகுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் இருந்து கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டது.
இதனையடுத்து காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் கரிசனை ஏற்பட்டுள்ளதாக மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இவற்றுக்கான வரவு செலவு திட்டம் மீண்டும் அறவிடப்படலாம் என்றும் மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் வரலாற்றில் இந்த இருண்ட காலத்தின் அத்தியாயத்தை மூடுவதற்கு இரு நிறுவனங்களும் திறம்பட செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள தீர்வை வழங்குவதற்காக அந்த இரண்டு அலுவலகங்களுக்கும் போதுமான நிதியை வரவு செலவு திட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒதுக்கவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
குறித்த இரண்டு அலுவலகங்களுக்கும் போதுமான வளங்களை அளித்து அவற்றை முழுமையாக இயக்கச் செய்யவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.