வலிமையான ஆட்சிக்காக மோடி அரசை நிறுவுவோம் – எடப்பாடி பிரசாரம்

வலிமையான ஆட்சியைத் தரக்கூடிய மோடி மீண்டும் பிரதமரானால் நாடு வளம்பெறும், செழிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து சங்கரப்பேரியில் முதல்வர் பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “வலிமையான ஆட்சியை தரக்கூடியவர் பிரதமர் நரேந்திர மோடி. அவர் மீண்டும் பிரதமரானால் நாடு வளம்பெற்று செழிக்கும்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. மெகா கூட்டணியுடன் மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. 40 தொகுதிகளிலும் இக்கூட்டணி வெற்றிபெறும்.
சில துரோகிகள் செய்த சதி வேலையின் காரணமாக 18 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இடைத் தேர்தல் மூலம் சதிக்காரர்களை வீழ்த்தி நாம் வெற்றிபெற வேண்டும். இதுவரை அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து அம்சங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் எமக்கு மக்களின் ஆதரவு வெகுவாக உள்ளது.
வேளாண் பெருமக்களுக்கு தேவையான திட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு முன்னுரிமை கொடுக்கிறது. தமிழகத்தில் வீணாகச் செல்லும் தண்ணீரைத் தேக்கி தடுப்பணை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக 1000 கோடி ரூபாயை அ.தி.மு.க. அரசு ஒதுக்கியுள்ளது. அத்துடன் தேர்தல் முடிந்தவுடன் ரூ.2,000 நிதியுதவித் திட்டமும் செயற்படுத்தப்படவுள்ளது” என்று அவர் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.