வலுவிழந்த புரெவி புயல் தொடர்ந்து ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது
In இந்தியா December 4, 2020 9:32 am GMT 0 Comments 2046 by : Yuganthini

தமிழக கடலோரத்துக்கு வந்த பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல், இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் இருந்தே தொடர்ந்து நகராமல் பல மணி நேரமாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இலங்கைக்கு கிழக்கே மையம் கொண்டிருந்த புரெவி புயல், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் இலங்கையில் திருகோணமலை பகுதியை தாக்கி கரையை கடந்தது. அதன் பின்னர் புரெவி புயல் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு நகர்ந்தது.
புரெவி புயல் முதலில் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும். பின்னர் அரபிக்கடலுக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் புயல் சற்று திசை மாறி வடமேற்கு நோக்கி பயணித்து நேற்று பாம்பன் அருகே நிலை கொண்டிருந்தது.
புரெவி புயல் நேற்று இரவு தொடங்கி அதிகாலைக்குள் பாம்பனுக்கும்,கன்னியாகுமரிக்கும் இடையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
ஆனால் நேற்று இரவு 8.20 மணியளவில் ‘புரெவி’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இராமநாதபுரத்தில் இருந்து தென் மேற்கே 40 கி.மீட்டர் தொலைவிலும், பாம்பனில் இருந்து தென்மேற்கே 70 கி.மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து வட.கிழக்கு பகுதியில் 160 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டு இருக்கிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலையில் 3 மணி நேரம் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது. அதன்பின்னர் மேற்கு, தென்மேற்கு திசையில் சற்று நகரத் தொடங்கியது.
எனவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது.
இந்த திசையில் தமிழக கடலோரத்துக்கு வந்த பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ”புரெவி’ புயல் இன்று காலையில் இருந்தே தொடர்ந்து நகராமல் பல மணி நேரமாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்யும். குறிப்பாக டெல்டா மண்டலங்களில் மிக கனத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே கரையை கடக்கிறது. அப்போது 55 கி.மீ. முதல் 65 கி.மீ வரை பலத்த காற்று வீசும். சில நேரங்களில் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.