வவுனியாவில் சுத்திகரிப்பில் ஈடுபட்ட நகரசபை ஊழியர்கள் நால்வர் உயிரிழப்பு
In இலங்கை April 25, 2019 9:14 am GMT 0 Comments 2503 by : Dhackshala
வவுனியா நகரசபையின் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தின் கழிவு பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரிக்கச்சென்ற நகரசபையின் சுகாதார உத்தியோகத்தர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. விஷவாயு தாக்கியதாலேயே குறித்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் மாடு வெட்டப்பட்ட இரத்தம் மற்றும் நீர் ஆகிய கழிவுப்பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ஒருவர் மயக்கமுற்ற நிலையில் குழியினுள் விழுந்துள்ளார். இந்நிலையில் அவரைக் காப்பாற்றச் சென்ற ஏனைய மூவரும் மயக்கமுற்று குழியினுள் விழுந்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட நபர் கூறியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நால்வரையும் காப்பாற்ற காவலாளி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் முயற்சித்துள்ளனர். எனினும் அவர்களால் காப்பாற்ற முடியாத நிலையில், நகரசபையின் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த விடயம் குறித்து அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த நால்வரையும் குழியிலிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சுகாயமாதா புரத்தினைச் சேர்ந்த செல்வராசா, வசந்தகுமார், ஜி.சசிக்குமார் (வயது-28), பூந்தோட்டத்தைச் சேர்ந்த சந்தனசாமி உள்ளிட்ட குடும்பஸ்தர்களே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.ஷ
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.