வவுனியாவில் வெளிநாட்டு அகதிகளை தங்க வைப்பது குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்
வவுனியா மாவட்டத்தில் வெளிநாட்டு அகதிகளை தங்க வைப்பது குறித்து வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் இருந்து அகதிகளாக இலங்கைக்கு வந்துள்ளவர்களை தங்க வைப்பது குறித்த கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், குறித்த கூட்டம் வவுனியாவில் அகதிகளை தங்க வைப்பது குறித்து அரசியல்வாதிகளுக்கு தெளிவுறுத்துவதாக அமைந்ததாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், “வெளிவிவகார அமைச்சர், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து வேறு நாடுகளுக்கு போவதற்காக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஸ்தாபனத்தில் பதிவுகளை மேற்கொண்டு காத்திருப்போர் நீர்கொழும்பில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், அண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அவர்கள் வசித்த வீட்டில் இருந்து வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்றியிருப்பதனால் அவர்கள் தற்போது நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தங்கியுள்ளனர். அவர்களை தற்காலிகமாக வேறு பிரதேசங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் வவுனியாவில் தற்போது புனர்வாழ்வு நிலையங்கள் இயங்கிவரும் கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் 169 பேரை குறுகிய காலம் தங்க வைப்பதற்கு திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே நாம் அவரிடம் கூட்டுறவு பயிற்சி கல்லூரி என்பது வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவு உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியில் நடத்துவற்கான ஒரேயொரு பயற்சிக் கல்லூரியாகும். இது ஏற்கனவே 2009ஆம் ஆண்டு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்க வைத்துள்ளனர்.
இது 10 வருடங்களாக இவ்வாறே உள்ளது. இது மாகாணசபைக்குரிய கட்டடம். எனவே இதனை எந்த தாமதமும் இன்றி எம்மிடம் ஒப்படைக்க வேண்டும். தற்போது அங்கு மீண்டும் அகதிகளைக் கொண்டுவந்து தங்கவைப்பதால் கட்டடத்தினை கையளிப்பதில் தாமதமாகும். இதனால் அனுமதிக்க முடியாது என தெரிவித்தோம். அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்” என்று வைத்தியல் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.