வவுனியா மொத்த விற்பனை நிலையத்தில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை
In இலங்கை December 17, 2020 9:12 am GMT 0 Comments 1551 by : Dhackshala

வவுனியா மரக்கறி மொத்த விற்பனை சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என வவுனியா மாவட்ட விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் நந்தன் தெரிவித்தார்.
வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள மொத்த விற்பனை நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்திகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “காலையில் மரக்கறி சந்தைக்கு வருபவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட உடல் வெப்ப பரிசோதனையின்போது சந்தை தொகுதியில் வர்த்தக நிலையத்தினை வைத்துள்ள இருவருக்கு வெப்பம் அதிகமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவர்களை நாம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அனுப்பி மீண்டும் உடல் வெப்ப நிலையை பரிசோதித்தபோது சாதாரண வெப்பநிலையே பதிவாகியிருந்தமை எமக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனவே, வதந்திகளை நம்பி அன்றாடம் தமது வாழ்வாதாரத்தினை மேற்கொள்ளும் விவசாயிகள் தமது பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதனை நிறுத்த தேவையில்லை.
தமது உற்பத்தி பொருட்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சந்தையில் விற்பனை செய்ய முடியும்” என அவர் மேலும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.