வாகனச் சோதனையில் சிக்கியது 220 வாக்காளர் அட்டை : அரசியல் பிரமுகர் உட்பட 7 பேர் கைது!

சென்னையில், 220 வாக்காளர் அடையாள அட்டையுடன் காரில் வந்த திமுக பிரமுகர் உட்பட 7 பேரை, பறக்கும்படை அதிகாரிகள் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் மேடவாக்கம் பிரதான வீதியில், ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியம் தலைமையில், பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக, திமுக கொடி கட்டியபடி மின்னல் வேகத்தில் வந்த காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, காரில் கட்டுக்கட்டாக தென்சென்னை லோக்சபா தொகுதிக்கான 220 புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, வாக்காளர் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் காரில் வந்த உள்ளகரம் 168வது வட்ட திமுக செயலாளர் திவாகர் (37), அவருடன் வந்த யுவராஜ் (38), ராகவன் (48), சுப்பிரமணி (47), கலைமணி (45), அம்புரோஸ் (54), ரவி (59) ஆகியோரை ஆதம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மடிப்பாக்கம் பொலிஸ் உதவி ஆணையாளர் கெங்கைராஜ், ஆதம்பாக்கம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர் வாக்காளர் அடையாள அட்டைகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 7 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம், ‘பெரும் எண்ணிக்கையில் வாக்காளர் அட்டை கிடைத்தது எப்படி, எங்கு கொண்டு செல்லப்படுகிறது, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?’ என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.