வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க நடவடிக்கை – தலைமை தேர்தல் அதிகாரி

தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இன்று(திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை நடத்தப்பட்டுள்ள சோதனையில் ரூ.78.12 கோடி சிக்கியுள்ளது. தொடர்ந்து சோதனை தீவிரப்படுத்தப்படும். உரிய ஆவணங்கள் இல்லாத பணம், நகைகள் பறிமுதல் செய்யப்படும்.
வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணம் பதுக்கி வைக்கப்படுள்ளதாக எங்களுக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் நாங்கள் சோதனை நடத்தி வருகிறோம். வருமான வரித்துறை மற்றும் பொலிஸார் உதவியுடன் இந்த சோதனை நடக்கிறது.
வேலூரில் நடத்தப்பட்டு வரும் சோதனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அங்கு மேலும் பல இடங்களில் சோதனை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் சோதனை நடத்துவதற்கு காரணமான ஆவணங்களை நாங்கள் கைப்பற்றி இருக்கிறோம். அவற்றை வருமானவரித்துறை கணக்கிட்டு வருகிறது.
மேலும் வேலூர் தொகுதியில் பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பற்றி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க உள்ளோம்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து தலைமை தேர்தல் ஆணையகம் தான் ஆலோசித்து முடிவு செய்யும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.