வான் இலக்கை துல்லியமாகத் தாக்கியழிக்கும் ஏவுகணையை பரிசோதித்தது இந்தியா!

தரையில் இருந்து வான் இலக்கை துல்லியமாகத் தாக்கியழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை பரிசோதனையை இந்தியா பரிசோதித்துள்ளது.
ஒடிசா மாநிலம், பாலாசோரில் உள்ள பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தளத்தில் இந்தப் பரிசோதனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
இதன்போது, முப்பது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இலக்கை ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கியழித்ததாக இந்திய பாதுகாப்புத் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாவது முறையாக நடைபெற்ற இந்தப் பரிசோதனையில் ஏவப்பட்ட ஏவுகணை, மணிக்கு சுமார் ஐயாயிரத்து 803 கிலோமீற்றர் வேகத்தில் சென்று இலக்கைத் தாக்கியதாக பாதுகாப்புத் துறையின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஏவுகணை அனைத்து காலநிலைகளிலும், அனைத்து இடங்களிலும் இருந்து ஏவக்கூடியது எனவும் சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் உள்ள லடாக் எல்லையில் இந்த ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.