வாள் முனையில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்!- 12 பவுண் நகைகள் திருட்டு
In இலங்கை January 8, 2021 6:14 am GMT 0 Comments 1380 by : Yuganthini

வவுனியா- வேப்பங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து 12 பவுண் நகையினையும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் திருடிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இரவு 11 மணியளவில் குறித்த பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் நுளைந்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
இதன்போது அங்கு உறங்கிக்கொண்டிருந்த முதியவரையும் பெண்மணியையும் வாள் முனையில் அச்சுறுத்தி, தாலிக்கொடி உட்பட தங்க நகைகளையும், 15 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் திருடியுள்ளனர் .
இதேவேளை மற்றைய அறையில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணொருவர் சத்தம் கேட்டு வெளியில் எழுந்துவந்த நிலையில் அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மூன்று நபர்கள் ஈடுபட்டருந்ததாகவும் முகமூடி அணிந்திருந்ததுடன், வாள்களையும் கையில் வைத்து அச்சுறுத்தி உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ள பொலிஸார், மொத்தமாக 12 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரணீத் திசாநாயக்க தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.