விசாரணைக்கு வருகின்றது பல்கலைக்கழக மாணவர்களின் வழக்கு!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழ் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலை உருவாகுவதைத் தடுக்கும் முகமாக, எதிர்வரும் திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் அனைத்தையும் சமர்ப்பணம் செய்ய சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.
இதற்கு உரிய அனுமதி வழங்கப்படும் என யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் சுட்டிக்காட்டினார் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன.
அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன், கலாநிதி குமாரவேல் குருபரன், கனகரட்ணம் சுகாஷ் ஆகிய மூவரும் முன்னிலையாகியிருந்தனர்.
பயங்கரவாத ஒழுங்குவிதிகளின் கீழும் தற்போதைய அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழும் மாணவர்கள் இருவருக்கும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால் பிணை எடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. அதனால் மாணவர்கள் இருவரும் எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.