விண்டிஸ் அணிக்காகத்தான் என் இதயம் இன்னமும் துடித்துக் கொண்டிருக்கிறது: நரைன் உருக்கம்
விண்டிஸ் கிரிக்கெட் அணிக்காகத்தான் என் இதயம் இன்னமும் துடித்துக் கொண்டிருக்கிறது என அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அணிகள் தற்போது உலகக்கிண்ண தொடருக்கு தயாராகி வருகின்றது. இந்த நிலையில், உலகக்கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட விண்டிஸ் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைனுக்கு இடம் கிடைக்கவில்லை. அணியில் இடம்பெறாதது குறித்து அவர் கூறுகையில்,
“நான் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்பினேன். நான் சர்வதேச கிரிக்கெட்டை இழந்தேன், விண்டிஸ் அணிக்காகத்தான் என் இதயம் இன்னமும் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த அணியையும் இழந்துள்ளேன.
என்னுடைய விரலும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இன்னும் தயாராகவில்லை, ஆனால் ரி-20 கிரிக்கெட் விளையாட முடியும். ஏனெனில் இதில் 4 ஓவர்கள் மட்டுமே வீசப்போகிறோம். ஆனால் இதற்கே உடற்தகுதி நிபுணர் உதவியில்லாமல் முடியவில்லை. இதுதான் என்னை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவிடாமல் செய்கிறது.
நான் எனக்கும் என் அணிக்குமே நியாயம் கற்பித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது. தொடரின் பிற்பகுதியில் வாய்ப்பு இருக்கலாம்… ஆனால் எனக்குத் தெரியவில்லை. ஆனால் விண்டிஸ் அணி உலகக் கிண்ண அணியில் அங்கமாக இருக்க மனதார விரும்புகிறேன்.
4 ஓவர் முதல் 10 ஓவர்கள் வீசும் அளவுக்கு என் காயம் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திருக்கிறேன்.
தேர்வுக்குழுவினர் என்னைத் தேர்வுக்குப் பரிசீலித்தனர் என்பது மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது. அவர்கள் நான் மீண்டும் விளையாட வேண்டும் என்று விரும்புவதை இது காட்டுகிறது. அவர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது நல்லது.
விரல் ஓரளவுக்குச் சரியாகி வருகிறது கொஞ்சம் வேகத்துடன் வீச வேண்டுமெனில் விரலில் இன்னும் கொஞ்சம் சக்தி வேண்டும். விரைவில் நான் விண்டிஸ் ஒருநாள், ரி-20 அணிகளில் இடம்பெறுவேன்” என கூறினார்.
சுனில் நரைன், கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. வலது நடுவிரலில் அவருக்கு சிறு தசைநார் கிழிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடர் முடிந்தவுடன் அறுவைச் சிகிச்சை கூட நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே இவரால் சில ஸ்பின் பந்துகளை வீச முடியாமல் உள்ளது.
30 வயதான சுனில் நரைன், இதுவரை 65 ஓருநாள் போட்டிகளில் விளையாடி 92 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.