வியாழேந்திரன் முன்நின்று மாவீரர் நாள் நிகழ்வினை பொது அரங்கில் நடத்தவும்- சுமந்திரன் அழைப்பு
மாவீரர் நாள் நிகழ்வகளை நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அவர், வியாழேந்திரன் முன்நின்று மாவீரர் தின நிகழ்வினை பொது அரங்கில் நடத்துமாறு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் மீது நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த உத்தரவை நீக்குமாறு கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் பெறப்பட்டுள்ள இந்தத் தடையுத்தரவை நீக்கக் கோரி அரியநேத்திரன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத், சட்டத்தரணி சயந்தன் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
குறித்த வழக்கினை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இந்நிலையில், இதுதொடர்பாக ஆராய்ந்த நீதவான், குறித்த வழக்கினை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த போதே வியாழேந்திரனிடம் மேற்படி அழைப்பை சுமந்திரன் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.