விறுவிறுப்பான போட்டியின் கடைசிப் பந்தில் வெற்றியை ருசித்தது சென்னை

நடைபெற்றுவரும் 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 25ஆவது போட்டியில் சென்னை அணி கடைசிப் பந்தில் வெற்றியை ருசித்தது.
ஜெய்பூரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி வீரர்கள் ஆரம்பத்தில் அதிரடியை வெளிப்படுத்திய போதும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக, ஸ்ரோக்ஸ் 28 ஓட்டங்களையும், பட்லர் 23 ஓட்டங்களையும் அதிகபட்சாக பெற்றனர்.
பந்துவீச்சில் சென்னை அணி சார்பில், தீபக் சாகர், ஜடேஜா மற்றும் தாகுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு சான்ட்னர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 152 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஆரம்பத்தில் தடுமாறியது.
எனினும் ராயுடு மற்றும் அணித் தலைவர் டோனி ஆகியோரின் நிதான ஆட்டத்தின் மூலம் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரின் கடைசிப்பந்துப் பரிமாற்றம் வரை விளையாடி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அணி சார்பாக டோனி 58 ஓட்டங்களையும், ராயுடு 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஸ்ரோக்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, குல்கர்னி, உனத்கட் மற்றும் ஜொப்ரா ஆர்செர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.