விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் இன்று பேச்சுவார்த்தை
In இந்தியா December 30, 2020 3:43 am GMT 0 Comments 1480 by : Varothayan

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் இன்று (புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியின் எல்லைப்பகுதிகளை ஆக்கிரமித்து அவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 34 ஆவது நாளாக நீடித்தது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு ஏற்கனவே 5 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறது. மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஒருமுறை விவசாய பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எத்தகைய முடிவும் எடுக்கப்படவில்லை. 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பதிலேயே விவசாயிகள் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
இதைத்தொடர்ந்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது. அதன்பேரில் நேற்று பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக அரசுக்கு கடிதமும் எழுதினர்.
எனினும் இந்த பேச்சுவார்த்தையை இன்று நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு அழைப்பும் விடுத்துள்ளது.
அதன்படி இரு தரப்பினரிடையே இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் தீர்வு எட்டப்பட்டு விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா? என்று நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.