வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றினுள் 17 வயது சிறுவனின் சடலம்
In கனடா April 18, 2019 5:43 am GMT 0 Comments 2205 by : Jeyachandran Vithushan

ஹமில்ட்டன் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து 17 வயது சிறுவன் ஒருவர் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இச்சம்பவம் தொடர்பாக மூன்று பதின்மவயதினரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்கள் மூவர்மீதும் முதலாவது கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவுசெய்துள்ளனர்.
காட்டுப்பகுதி ஒன்றில் வாகன விபத்து இடம்பெற்றதாக கிடைத்த தகவலை அடுத்து, திங்கட்கிழமை இரவு ஹமில்ட்டன் பொலிஸார் அங்கு சென்றிருந்தனர்.
அங்கே கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கார் ஒன்றினுள் ஒருவர் மூச்சுப்பேச்சற்ற நிலையில் காணப்பட்ட நிலையில், சம்பவஇடத்திற்கு விரைந்த அவசரமருத்துவப் பிரிவினர் அவருக்கு உயிர்காப்பு சிகிச்சைகளை அளித்த போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 17 வயதான அப்துல்லா ஹசான் எனவும், இவர் கடந்த 2014ஆம் ஆண்டில் தனது குடும்பத்தாருடன் டுபாயில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் காணப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், எந்தப் பகுதியில் வைத்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது மற்றும் எத்தனை தடவை போன்ற தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்து இரண்டு 16 வயதுச் சிறுவர்களும், ஒரு 15 வயதுச் சிறுவனும் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்ட பொலிஸார் , இந்தச் சம்பவம் தம்மை மிகவும் சிந்திக்க வைப்பதாகவும், ஏன் இவ்வாறு நடந்தது என்பது மிகவும் குழப்பமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அருகே இருந்து துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த துப்பாக்கி இந்தக் குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.