மீன்பிடிக்கு உகந்த காலம் இரவு மற்றும் அதிகாலை வேளையாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் வெளிச்சம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். வெளிச்சமின்றி மீனவர்கள் வேறு கரைகளுக்குச் செல்வதும், விபத்துக்களைச் சந்திப்பதும் தொடர்கதையாகவுள்ளன.
அவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒரு பிரதேசம் தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் (26.02.2019) கவனஞ்செலுத்துகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட கரையோர பகுதி மக்கள், மீன்பிடி தொழிலையே தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில், வெளிச்ச வீடு இன்மையால் அம்மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சுமார் 50 கிலோமீற்றர் நீளமான முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோர பகுதியில் எந்தவொரு இடத்திலும் வெளிச்ச வீட்டு கோபுரங்களும் இல்லை. முல்லைத்தீவு நகரப்பகுதியில் யுத்தத்திற்கு முன்னரான காலத்தில் வெளிச்சவீடொன்று காணப்பட்ட போதிலும், யுத்தத்தின் கோரத்தால் 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த வெளிச்ச வீடு குண்டுவைத்து தகர்க்கப்பட்டது.
அதன் பின்னரான காலப்பகுதியில் ஆழ்கடலுக்கு செல்கின்ற மீனவர்கள் கடும் மழை காலங்களில் திசை தெரியாது வேறு திசைகளுக்குச் சென்று காணாமல் போன சம்பங்களும் இடம்பெற்றுள்ளன. அத்தோடு மாவட்டத்தை விட்டு வேறு பிரதேசங்களில் கரையேறிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
கடற்றொழிலை நம்பி வாழும் இப்பிரதேச மக்களுக்கு தேவையான விடயங்களை செய்துகொடுப்பது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும். அந்தவகையில், ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொழில் செய்யும் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய இடங்களிலாவது வெளிச்சவீடு அமைத்துத் தருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.