வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக மோசடி – சந்தேக நபர் யாழில் கைது!

இளையோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரே நேற்று(செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இளையோருக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நிறுவனத்திடம் பல லட்சம் ரூபாய் பணத்தைச் செலுத்தி வேலைவாய்ப்புக் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
அத்துடன் நேற்றைய தினமும் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குனர் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.