UPDATE – உக்ரைன் நாட்டவர்களின் சுற்றுலாப் பயணம் இரத்து
In இலங்கை January 4, 2021 6:21 am GMT 0 Comments 1895 by : Dhackshala
உக்ரைன் நாட்டில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் சீகிரிய மற்றும் பொலனறுவைக்கு இன்று மற்றும் நாளை செல்ல ஏற்பாடு செய்திருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் சுற்றுப்பயணிகள் குழு வருவதனால் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு பல சுற்றுலாத் தளங்களைப் பார்வையிட தடை விதிக்கப்பட்ட நிலையில் மத்திய கலாச்சார நிதியம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இருப்பினும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் பயணம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்காக சீகிரியா மற்றும் பொலனறுவையில் உள்ள சுற்றுலாத் தளங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உக்ரைன் சுற்றுப்பயணிகள் குழு அடுத்ததாக தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய இடங்களை பார்வையிடவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செல்லவுள்ளதால் உள்நாட்டு பயணிகளுக்குத் தடை
இலங்கையின் பல இடங்களுக்கு உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் பயணம் செய்யவுள்ளதால், குறித்த பகுதிகளுக்குச் செல்ல உள்நாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள் கடந்த 28ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பதோடு, இன்றைய தினம் குறித்த சுற்றுலா குழுவினர் பொலனறுவைக்குச் சுற்றுலா செல்லவுள்ளனர்.
பொலனறுவை சுற்றுலா பகுதிகளான பராக்கிரமபாகு மாளிகை, தளதா முற்றம், சிவன் ஆலயம் இல – 02, ரண்கொன் வெஹெர, லங்கா திலக்க விகாரை, கிரி விஹாரை மற்றும் கல் விகாரை ஆகிய பகுதிகளுக்கு இன்றைய தினம் அவர்கள் பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த பகுதிகளுக்குச் செல்ல உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நாளைய தினம் அவர்கள் சிகிரியாவிற்கு செல்லவுள்ளமையினால் நாளை நண்பகல் 12 மணி முதல் அங்கு உள்நாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.