வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு: கொடிகாமத்தில் சம்பவம்
In இலங்கை December 3, 2020 10:46 am GMT 0 Comments 1890 by : Yuganthini

தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர், வீதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் அவரை மீட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம், கொடிகாமம் மத்தி, நாகநாதன் வீதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று காலை 8 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் வீதியால் சென்றபோது, நபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் நீரில் கிடந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை மீட்ட பொலிஸார், அண்மையிலுள்ள மிருசுவில் நாவலடி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் தவசிகுளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த மாகாலிங்கம் மகேஷ் (வயது – 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
புரவி புயல் காரணமாக நாட்டின் பல இடங்களிலும் பெய்த கடும் மழையினால், வீதிகள், உள் ஒழுங்கைகள் அனைத்திலும் நீர் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையிலேயே இந்நபரும் நீருக்குள் தவறுதலாக வீழ்ந்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.