வேலூர் தேர்தல் இரத்தால் தமிழகத்துக்கே தலைகுனிவு – தமிழிசை காட்டம்

வேலூர் தேர்தல் இரத்தால் தமிழகத்துக்கே தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு இன்று (புதன்கிழமை) பதிலளிக்கும்போதே தமிழிசை இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில். “பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்களின் வீட்டில் பணம் இருந்திருக்கலாம். வருமான வரித்துறை எந்த ஆதாரமும் இல்லாமல் வராது. ஏன் பயப்படுகிறார்கள்? இல்லையென்றால் இல்லையென்று சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே?
துரைமுருகனின் நண்பர்கள் வீட்டில் கண்டுபிடித்த பணத்துக்கு இவர்களின் பதில் என்ன? தூத்துக்குடியில் பணமே விளையாடவில்லை என்று இவர்களால் சொல்லமுடியுமா? நேர்மையான அரசியல் செய்துகொண்டிருக்கிறேன். என்னிடம் கோடியாக கோடியாக இருக்கிறது என்று கூறி ஸ்டாலின் இதில் விளையாட வேண்டாம்.
வேலூரில் தேர்தலை இரத்துச் செய்ததற்கு ஆதாரம் உள்ளது. தூத்துக்குடியில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. கனிமொழி தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்தவேண்டும் என்று ஆசைப்படலாம். இவர்கள் வேலூர் சம்பவத்துக்குப் பதில் சொல்லிவிட்டு தூத்துக்குடிக்கு வரட்டும்.
இந்தியா முழுவதும் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதி தி.மு.க.வால் இரத்து செய்யப்பட்டது எவ்வளவு பெரிய தலைக்குனிவு? நீங்கள் தலை நிமிர்கிறோம் என்று விளம்பரம் செய்கிறீர்களே, ஒரு கட்சியின் பொருளாளர் வீட்டில் பணம் எடுக்கப்பட்டது தலைகுனிவு தானே.
அது கட்சியின் பணமா, துரைமுருகனின் பணமா? யாரின் பணம் என்று ஸ்டாலின் தெளிவுபடுத்தட்டும். இந்தியாவிலேயே தமிழகம் தலை குனியும் அளவுக்கு தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின், கனிமொழியின் பதில் என்ன?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார் தமிழிசை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.