வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் – முதல்வருக்கு கடிதம்!

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை இரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டக்கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, கேரள சட்டமன்றத்திலும் 3 வேளாண் சட்டங்களையும் இரத்து செய்ய வலியுறுத்தி நேற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைந்தபட்ச ஆதார விலை இல்லாத, கார்ப்பரேட்டுகளுக்கு, தங்களை நிரந்தர அடிமைகளாக்கும் இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பது போராடும் விவசாயிகளின் முக்கியமானதும், முதலாவதுமான கோரிக்கையாக இருக்கிறது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதன் முதலில் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்து, இலவச மின்சாரம் அளித்த மாநிலம் என்ற முறையில், விவசாயிகளுக்கு மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றிணைந்து, தமிழகம் அவர்கள் பக்கம் நின்று, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், அதற்காக சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.