வோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்தவகையில் சென்னை அணி பிளே ஓஃப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது.
நடைபெற்றுவரும் 12ஆவது ஐ.பி.எல்.தொடரின் 41 ஆவது போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.
மானிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் டேவிட் 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும் தீபக் ஷாகர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு 176 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஷேன் வோட்சனின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் வெற்றியை சுவீகரித்தது.
சென்னை அணி, 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அவ்வகையில் 6 விக்கெட்டுகளால் சென்னை அணி வென்றது.
அணிசார்பாக, ஷேன் வோட்சன் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 53 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் சுரேஷ் ரெய்னா 38 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், புவனேஸ்குமார், சன்டீப் சர்மா மற்றும் ரஷிட் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.