ஸ்பெயின் நாட்டின் மொத்த பரப்பளவை விட அதிகமான அளவு அமேசான் மழைக்காடுகள் அழிப்பு!

ஸ்பெயின் நாட்டின் மொத்த பரப்பளவை விட, அதிகமான அளவு அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக ‘அமேசான் அட்லஸ்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரேஸில், பெரு, வெனிசுவேலா, கொலம்பியா, பொலிவியா, ஈக்வடார், கயானா ஆகிய நாடுகளில் பரவியுள்ள அமேசான் மழைக்காடுகள், உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.
அதிக அளவில் ஆக்சிஜனையும் மழைப்பொழிவையும் தரும் அமேசான் காடுகளின் பெரும்பகுதி பிரேஸில் நாட்டில் தான் உள்ளது. அமேசான் மழைக்காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்த காட்டுத்தீயில் சிக்கி பல்லாயிரக்கணக்கான அரியவகை வன உயிரினங்கள், மரங்கள் ஆகியவை அழிந்தன. இதற்கு பிரேஸில் ஜனாதிபதி காட்டை பாதுகாக்க தவறிவிட்டதாகவும், காட்டு அழிப்பை ஊக்குவிப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், 2000ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகளில் அமேசானில் காடுகள் எவ்வளவு அழிக்கப்பட்டுள்ளன என்ற புள்ளிவிபரங்களை அமேசான் அட்லஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி 2000ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை மொத்தமாக 5 லட்சத்து 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இவை காட்டுத்தீ, மனிதர்களால் மேற்கொள்ளப்படும் காடுகள் அழிப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றால் நிகழ்ந்துள்ளது.
5 லட்சத்து 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் என்பது ஸ்பெயின் நாட்டின் மொத்த பரப்பளவை விட அதிகம் ஆகும். ஸ்பெயினின் மொத்த பரப்பளவு 5 லட்சத்து 5 ஆயிரத்து 990 கிலோமீட்டர்கள் ஆகும். இதற்கமைய, 18 ஆண்டுகளில் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவில் 8 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.