11 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய சம்பியன்ஷிப் பட்டத்தை வென்று டைகர் வுட்ஸ் சாதனை!
In விளையாட்டு April 15, 2019 8:27 am GMT 0 Comments 2032 by : Anojkiyan

உலகின் பணக்கார விளையாட்டு வீரரும், புகழ் பூத்த குழிப்பந்தாட்ட வீரருமான அமெரிக்காவின் டைகர் வுட்ஸ், 11 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய சம்பியன்ஷிப் பட்டமொன்றை வென்று அசத்தியுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவிலான சம்பியன் பட்டத்தை வெல்லாமல் இருந்த 43 வயதான டைகர் வுட்ஸ், குழிப்பந்தாட்ட விளையாட்டின் உயரிய மற்றும் முக்கிய போட்டிகளில் ஒன்றான ‘மாஸ்டர்ஸ் டோர்னமெண்டில்’ தொடரில் மகுடம் சூடி தனது மீள் வருகையை நிரூபித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்திற்காக, டைகர் வுட்ஸ் நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதனால் அவரின் குழிப்பந்தாட்ட எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை இருந்த போதும், எவ்வித அழுத்தங்களையும் பொருட்படுத்தாது அவர் தற்போது 15ஆவது முறை முக்கிய சம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். அத்தோடு கௌரம் மிக்க ஐந்தாவது பச்சை நிற கோர்ட்டையும் தன்வசப்படுத்தியுள்ளார்.
தனது இந்த வெற்றி குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இவை, “நான் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக நடப்பதே மிகவும் கடினமாக இருந்தது. அதற்கு குழிப்பந்தாட்ட விளையாட்டே காரணமென்று எனது குழந்தைகள் கருதினர்.
நான் மிகவும் விரும்பி செய்யும் ஒன்றிற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பெற்றதில் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். கடந்த பல ஆண்டுகளாக உட்கார முடியாமல், எதையும் சரிவர செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வருவதற்கு நான் கையாண்ட நடைமுறைகளின் காரணமாகவே எனது இயல்பு வாழ்க்கை திரும்ப கிடைத்துள்ளது
நான் மீண்டும் இயல்பு பாதைக்கு திரும்புவதற்கு உதவிய இந்த போட்டியில் பெற்ற வெற்றியை மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். எனக்கு குழிப்பந்தாட்ட விளையாட்டு எவ்வளவு முக்கியமானது என்பதை என் குழந்தைகள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்” என கூறினார்.
இவ்வாறு மகத்தான சாதனையுடன் கூடிய வெற்றியை பதிவு செய்த டைகர் வுட்ஸிற்கு தற்போது அமெரிக்க ஜனாபதி டோனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு சம்பியன் பட்டம் வெல்லாத டைகர் வுட்ஸ், கடந்த ஆண்டு டுவர் சம்பியன்ஷிப்’ தொடரில், சம்பியன்ஷிப் பட்டம் வென்றார். அதன்பிறகு எந்த சம்பியன் பட்டமும் வெல்லாத நிலையில் தற்போது சாதித்துள்ளார்.
குழிப்பாந்தாட்ட விளையாட்டில் இதுவரை 14 சம்பியன் பட்டங்களை வென்றுள்ள டைகர் வுட்ஸ், அண்மைய காலங்களில் பெற்ற தோல்விகளால், குழிப்பந்தாட்ட விளையாட்டுக்கு மிக விரைவில் விடை கொடுப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது இந்த வெற்றியானது அவரின் ஒய்வை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் புகழ் பூத்த வீரரான டைகர் வுட்ஸ், 1997ஆம், 2001ஆம், 2002ஆம், 2005ஆம் ஆண்டுகளில் மாஸ்டஸ் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
2000ஆம், 2002ஆம், 2008ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஓபனில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2000ஆம், 2005ஆம், 2006ஆம் ஆண்டுகளின் ஒபன் சம்பியன்ஷிப்களின் பட்டம் வென்றுள்ளார்.
1999ஆம், 2000ஆம், 2006ஆம், 2007ஆம் ஆண்டுகளின் பி.ஜி.ஏ சம்பியன்ஷிப்களில் பட்டம் வென்றுள்ளார். இதுதவிர உரிய 53 விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.