20ஆம் திருத்தம் தோல்வியடைந்தால் நாமும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவோம் – ஜே.வி.பி

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20ஆம் திருத்தம் வெற்றிபெறாது போனால் ஜே.வி.பியும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதிக்கும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி பிரதான இரண்டு கட்சிகளையும் வீழ்த்தும் எனவும் அதற்காக பிரதான இரண்டு கட்சிகள் தவிர்ந்து ஏனைய சகல அரசியல் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்கால அரசியல் நிலைமைகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் சகல மக்களையும் இணைக்கும் மத்திய நிலையம் ஒன்றினை அமைக்கவுள்ளதாக தெரிவித்த அவர், இது எந்த அரசியல் கட்சிகளையும் சாராது நாட்டு மக்களை மீட்டெடுக்கும் பொதுவான வேலைத்திட்டமாக காணப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், இதனை உருவாக்க சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.
மேலும், இலங்கை அந்நிய ஆட்சியில் இருந்து விடுபட்டு 70 ஆண்டுகள் கடந்து சுயாதீன ஆட்சியை இதுவரையில் நடத்தி வருகின்ற போதிலும் இலங்கை மக்களுக்கு நன்மைதரும் ஒரு ஆட்சியை இந்த ஆட்சியாளர்களினால் முன்னெடுக்க முடியாது போயுள்ளது.
ஆகவே இனியும் இந்த ஆட்சியாளர்களைக் கொண்டு நாட்டினை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது. இன்று நாட்டின் கடன்தொகை அதிகரித்துள்ளது. அபிவிருத்திகள் கைவிடப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை மாற்றியமைக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.