’20’ஆம் திருத்தம்: முஸ்லிம் தரப்பு சரணடைந்த கட்டத்தில் ஓங்கி எதிர்த்த தமிழர் தரப்பு.!
November 2, 2020 6:59 am GMT

“பெரும்பாலானவர்களின் நிலைப்பாடுதான் உண்மை எனக் கருதிச் செயற்படுவது ஜனநாயகம் அல்ல. பெரும்பாலானவர்களின் நிலைப்பாடு மட்டுமே சரியானது சிறுப்பான்மையின் நிலைப்பாடு தவறு என்று கருதுவதுதான் மூன்றாம் உலக நாடுகளின் அழிவுக்குக் காரணம்” – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய
ராஜபக்ஷக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற பொழுது அந்த வெற்றிக்கு முன்பு சிவில் சமூகங்களும் மத நிறுவனங்களும் அடங்கிப் போயின. பொதுவாக உலகம் முழுவதிலும் இராணுவப் பண்பு மிக்க தலைவர்கள் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றிகளைப் பெறும்போது சிவில் தரப்பு ஒடுங்கிப் போவது வழமை.
இலங்கையிலும் அதுதான் நடந்தது. முதலில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் அதன் பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் ராஜபக்ஷக்கள் பெற்ற வெற்றியானது சிவில் தரப்பை ஒடுங்கச் செய்யக் கூடியது. அதைத்தான் 20ஆவது திருத்தத்தின் போது நாம் கண்டோம்.
20ஆவது திருத்தத்திற்கு எதிராக சிங்கள சிவில் சமூகம் பெருமளவிற்கு வாய் திறக்கவில்லை. ஆங்காங்கே உதிரியாக குரல்கள் எழுப்பப்பட்டன. சில தனிநபர்கள் தமது எதிர்ப்பை கூர்மையான விதங்களில் வெளிப்படுத்தினார்கள்.
ஆனால், எதிர்க்கட்சிகள் உட்பட மத நிறுவனங்கள், கருத்துருவாக்க அமைப்புக்கள், படைப்பாளிகள் போன்ற பெரும்பாலான சிவில் தரப்புக்கள் முடங்கிப் போன ஒரு நிலைமைதான் அங்கே காணப்பட்டது.
2015இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பொழுது அதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கலாநிதி ஜயதேவ உயங்கொட அதை ‘அரசியலின் மீது சிவில் சமூகத்தின் தார்மீகத் தலையீடு’ என்று வர்ணித்தார்.
அமரர் சோபித தேரர் உட்பட மத குருக்களும் படைப்பாளிகளும் புத்திஜீவிகளும் கருத்துருவாக்கிகளும் சிவில் சமூகத்தினரும் சேர்ந்து அந்த மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
ஆனால், அவ்வாறு ஒரு சிவில் சமூகங்கள் அரசியலின் மீது தார்மீகத் தலையீட்டை செய்யக்கூடிய ஒரு நிலைமை ஜனாதிபதித் தேர்தலின் போதும் இருக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இருக்கவில்லை. சோபித தேரர்களுக்குப் பதிலாக ஞானசார தேரர்களும் ரத்ன தேரர்களும் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு நிலைமையே காணப்பட்டது.
இவ்வாறான ஒரு பின்னணியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற ராஜபக்ஷக்கள் 20ஆவது திருத்தத்தை கொண்டுவந்து அதன்மூலம் தம்மை அரசர்களைப் போல அதிகாரம் உடையவர்களாக மாற்றிக்கொள்ள முனைந்தபோது எந்தவொரு மத நிறுவனமும் சிவில் சமூகமும் தனது எதிர்ப்பை வலிமையாகக் காட்டவில்லை.
கொரோனா தொற்று சூழலும் அதற்கு ஒரு காரணம்தான். என்றாலும் மாளுவ சோபித தேரரைப் போன்ற சிவில் சமூகங்களுக்கு தலைமை தாங்க வல்ல ஆளுமைகள் பெருமளவிற்கு ஒடுங்கிப்போய் இருந்த ஒரு சூழலில்தான் 20ஆவது திருத்தத்தை ராஜபக்ஷக்கள் முன்னகர்த்தினார்கள்.
உயர் நீதிமன்றம் அதில் ஒரு இடையீட்டைச் செய்தது. அது ராஜபக்ஷக்களின் கனவை முழுமையாகச் சிதைக்கவில்லை. ஆனாலும் நீதிமன்றத்தின் தலையீட்டின் பின்னர்தான் பௌத்த மத நிறுவனங்களும் ஆயர்களின் அமைப்பும் அறிக்கைகள் விட்டன.
நீதிமன்றத்தை விடவும் கருத்துருவாக்கச் சக்தி மத நிறுவனங்களுக்கே அதிகமுண்டு. ஆனால், இம்முறை நீதிமன்றத்தின் வியாக்கியானம் வெளியிடப்பட்ட பின்னரே மத நிறுவங்கள் அதுவும் ஒப்பீடளவில் பெரும்பான்மை மக்களை பிரநிநிதித்துவப்படுத்தாத மதப் பிரிவுகளே வாய் திறந்தன.
அதில், தலையிட்ட பௌத்த மத நிறுவனங்கள் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் மேட்டுக் குடியின் மீதோ உயர் குழாத்தின் மீதோ செல்வாக்குச் செலுத்தவல்ல பலமான சங்கங்கள் அல்ல. மிகச் சிறிய செல்வாக்கற்ற சங்கங்களே அவை.
ஆயின், இரண்டு பெரிய பௌத்த பீடங்களான மல்வத்த பீடமும் அஸ்கிரிய பீடமும் ராஜபக்ஷகளின் பக்கம் மறைமுகமாக நின்றனவா? அவை கருஜெயசூரியாவின் பின்னணியில் நின்றதாக ஒரு தகவல் உண்டு. ஆனால், திரண்ட விளைவைக் கருதிக் கூறின் இருபதாவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது இந்த இரண்டு மகா சங்கங்களும் அதற்கு எதிரான தார்மீகத் தலையீட்டைச் செய்யவில்லை.
இப்படிப்பட்டதொரு பின்னணியில் 20ஆவது திருத்தத்தை ராஜபக்ஷக்கள் நிறைவேற்ற முடிந்தது. இது விடயத்தில் ராஜபக்ஷக்களின் அசுர பலத்தைக் கண்டு முஸ்லிம் கட்சிகள் அடங்கிப் போயின. அதன்விளைவே, வாக்கெடுப்பின் போது தலைவர்கள் திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க ஏனைய பிரதிநிதிகள் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் விலாங்குத் தனமான ஒரு அரசியலை முன்னெடுக்கும் நிலை உருவாகியது.
இவ்வாறு, எதிர்க் கட்சிகளையும் சிவில் சமூகங்களையும் பின்வாங்கச் செய்யும் அசுர பலத்தோடு ராஜபக்ஷக்கள் முன்னேறிய ஓர் அரசியல் சூழலில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்றத்தில் தமது எதிர்ப்பை எளிமையாகவும் கூர்மையாகவும் முதலில் வெளிப்படுத்தியது மாற்றுத் தரப்பை சேர்ந்த மூன்று தமிழ் அரசியல்வாதிகளும் தான்.
ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அசுர பலத்தோடு வெற்றிபெற்ற பொழுது எதிர்க்கட்சி இரண்டாக உடைந்து தடுமாறிக் கொண்டிருந்த ஓர் அரசியல் சூழலில் முதலில் ஒலித்த எதிர்க் குரல்கள் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகிய மூவருடையவைதான்.
மாற்று அணியைச் சேர்ந்த அம்மூவவரினதும் எதிர்க்குரல்களுக்கு முன்னால் சுமந்திரன், சம்பந்தர், ஸ்ரீதரன் போன்றோரின் குரல்கள் மங்கிப்போய் விட்டன. எனினும், சாணக்கியனின் குரல் கவனிப்பைப் பெற்றது. இப்படிப் பார்த்தால் ராஜபக்ஷக்கள் பெற்ற அசுர வெற்றிக்கு முதலில் எதிர்ப்பை காட்டியது தமிழ்த் தரப்புதான்.
இவ்வாறு, விக்னேஸ்வரனும் கஜன்களும் தமது எதிர்க் குரலை கூர்மையாக வெளிப்படுத்திய போது ராஜபக்ஷக்களின் தமிழ் நண்பர்களும் உட்பட பலரும் அதை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தார்கள்.
மீண்டும் இன முரண்பாட்டைத் தூண்டுகிறார்கள் என்றும் அரசியலை துருவ நிலைக்குக் கொண்டு போகிறார்கள் என்றும் சாத்தியமற்ற எதிர்ப்பைக் காட்டி தமிழ் மக்களை மேலும் ஆபத்தான பாதுகாப்பற்ற ஒரு நிலைக்குத் தள்ளப் போகிறார்களா என்றும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரான இன்றைய சூழலில் நிலைமைகளை தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. பெரும்பாலான எதிர்க் கட்சிகளும் சிவில் தரப்பும் பலவீனமாக இருந்த ஒரு ஓர் அரசியல் சூழலில் தமிழ் தரப்புத்தான் தனது எதிர்ப்பை வலிமையாக வெளிக்காட்டி இருக்கிறது.
இது மிக வலிமையான தமிழ் எதிர்ப்பு அரசியல் பாரம்பரியத்தில் பாற்பட்ட ஒன்றே. முஸ்லிம் தரப்பு பெருமளவுக்கு சரணடைந்த ஒரு சூழலில் தமிழ் தரப்பிலிருந்து இந்த எதிர்ப்பு வலிமையாக வெளிக் காட்டப்பட்டிருக்கிறது.
இப்படித்தான் 2018ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் கவிழ்த்த போதும் தமிழ் தரப்பே மிகவும் முற்போக்கான பாத்திரத்தை வகித்தது. தமிழ் எதிர்ப்புதான் நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் வலிமையாக வெளிப்பட்டது.
அதில், சுமந்திரன் வகித்த பாத்திரம் விமர்சிக்கப்படுகிறது எனினும் அன்றைக்கு ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றுவதற்காக அல்லது மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலை பாதுகாப்பதற்காக கூட்டமைப்பும் முஸ்லிம் பிரதிநிதிகளும் சிங்களக் கட்சிகளில் ஒரு பகுதியும் இணைந்து ராஜபக்ஷவை தோற்கடித்தார்கள்.
அக்காலகட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் அபூர்வமான ஓர் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். அனைவரும் ஒன்றாகத் திரண்டு ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு தமிழ், சிங்களப் பிரதிநிதிகளோடு இணைந்து ஒன்றாக நின்றார்கள்.
ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களிலும் ராஜபக்ஷக்கள் பெற்ற வெற்றிகளைக் கண்டு முஸ்லிம் பிரதிநிதிகள் பயந்து பின்வாங்கி விட்டார்கள் என்பதைத்தான் 20ஆவது திருத்தம் நிரூபித்திருக்கிறது.
எனவே, 2018 ஒக்டோபர் ஆட்சிக் குழப்பத்திலிருந்து நடந்து முடிந்த இருபதாவது திருத்த வாக்கெடுப்பு வரையிலுமான அரசியல் நிலைவரங்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு பேருண்மை வெளிவருகிறது.
அது என்னவெனில், தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டால்தான் சிங்கள முஸ்லிம் மக்களுக்கும் ஜனநாயகம் என்ற ஒன்று கிடைக்கும். தமிழ் மக்களோடு சேர்ந்து போராடினால்தான் முஸ்லிம் மக்களுக்கும் மீட்சி கிடைக்கும்.
இல்லையென்றால், இரண்டு சிறிய தேசிய இனங்களையும் பெருந் தேசிய இனம் பிரித்துக் கையாள்வதோடு இலகுவாக நசுக்கப் பார்க்கும். அதுமட்டுமல்லாது, தமிழ் மக்களின் எதிர்ப்பு சக்தி அடக்கப்பட்டால் அதன்பின்பு சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தமது எதிர்ப்பைக் காட்ட ஒரு ஜனநாயக வெளி கிடைக்கப் போவதில்லை. 2009 இற்குப் பின்னரான நிலைமைகள் அதைத்தான் நிரூபித்தன.
2009 மே மாதத்திற்குப் பின்பு ஒரு முன்னாள் ஜே.வி.பி. முக்கியஸ்தர் என்னோடு கதைக்கும்போது கூறினார், தமிழ் மக்களின் எதிர்ப்பு சக்தி தோற்கடிக்கப் பட்டிருக்கும் இச்சூழலில் இனி இலங்கை தீவில் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பைக் காட்டலாம் என்று நம்பிக்கையும் துணிச்சலும் இனி ஒருவருக்குமே வரப்போவதில்லை.
அதாவது, தமிழ் எதிர்ப்பு நசுக்கப்பட்ட பின்பு முஸ்லிம் எதிர்ப்புக்கும் இடமில்லை சிங்கள எதிர்ப்புக்கும் இடமில்லை. இதைத்தான் 2009 இற்குப் பின்னரான நிலைமைகள் நிரூப்பித்தன. குறிப்பாக 20ஆவது திருத்த வாக்கெடுப்பின் போதான நிலைமைகளும் அதைத்தான் நிரூபிக்கின்றனவா..??

-
தமிழ் கட்சிகள் ஜெனீவாவுக்கு அனுப்பிய ஒரு பொது ஆவணம்!
2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்ட...
-
உலக நாடுகளிலும் நொதிக்கத் தொடங்கிய தமிழர் உணர்வுப் போராட்டம்: இடைநடுவில் விட்டுவிடலாமா??
யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவா...