2020பற்றிச் சிந்திக்கும் முன்பு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள்
In சிறப்புக் கட்டுரைகள் May 8, 2018 4:09 am GMT 0 Comments 3130 by : Arun Arokianathan
2020ம் ஆண்டில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருப்பது அதற்கு அப்பாலும் அதிகாரத்தை எப்படி கைப்பற்றலாம் என்று திட்டமிடுவது என்பதாகவே இலங்கையின் பிரதான கட்சிகளின் மே தினங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் சாரம்சம் அமைந்திருந்தது.
இந்த கருத்துக்களை ஒதுக்கிவிட்டுப்பார்த்தால் இம்முறை மேதின விழா பாரியளவில் சோபிக்கவில்லை என்பது வெள்ளிடைமலையாகும். வெசாக் வாரத்தினுள் மேதினமும் வந்திருந்ததால், இம்முறை மேதினத்தை ஏழாம் திகதியே கொண்டாடுவதென அரசாங்கம் அறிவித்திருந்ததாலேயே இம்முறை தொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள் பாரியளவில் சோபிக்கவில்லை.
தொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்து விட்டன. ஐக்கிய தேசியக் கட்சி நேற்றுமுன்தினம் தனது மேதின வைபவத்தை நடத்தியிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது மேதின விழாவை நேற்று நடத்தியிருந்தது. நாட்டின் இரண்டு பிரதான தேசியக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுமே தத்தமது மேதின நிகழ்வுகளை நடத்தி முடித்து விட்டன.
அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிலாளர் அமைப்புகளும் ஒரே நாளில் மேதினத்தைக் கொண்டாடியிருப்பின் கொழும்பு உட்பட நாட்டின் நகரங்கள் அத்தனையுமே பெரும் கோலாகலம் பூண்டிருக்கும். ஆனால் இம்முறை ஒவ்வொரு அமைப்பும் வெவ்வேறு தினத்தில் மேதினத்தைக் கொண்டாடியதன் காரணமாகவே வைபவங்கள் பாரியளவில் களைகட்டவில்லை.
இது ஒருபுறமிருக்க, இலங்கையில் மாத்திரமன்றி உலகின் பெருமளவான நாடுகளில் மேதினம் என்பது வருடத்தில் ஒருநாள் கூடிக் கோஷமிடுகின்ற கொண்டாட்டமாகவே காணப்படுகின்றது.
அரசியல் கட்சிகள், தொழிலாளர் அமைப்புகள் போன்றவையெல்லாம் வருடம் தோறும் மேதினத்தன்று பெரும் ஏற்பாட்டில் தொழிலாளர் தின வைபவத்தை நடத்துகின்றன. தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மேடை போட்டு கோஷமிடுகின்றன; கொடிகள், பதாகைகள் தாங்கியபடி பெரும் ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை தத்தமது எதிராளிகளை வசைபாடுவதற்குப் பொருத்தமான இடமாக மேதின மேடை அமைந்து விடுகின்றது.
வருடத்தில் ஒரு தடவை கூட்டம் போட்டு ஆக்ரோஷமிடுவதுடன் அவர்களது கடமை முடிந்து விடுகின்றது. அதன் பின்னர் அடுத்த வருட மே தினம் வரும் வரை தொழிலாளர்களைப் பற்றி அரசியல்வாதிகளோ அல்லது தொழிற்சங்கங்களோ கவலைப்படுவதில்லை.
இவ்வாறான மேதின வைபவங்களால் தொழிலாளர்களுக்கு பயன் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை. ஆண்டுக்கு ஒரு தடவை கூடிப் பேசுவதால் தீர்த்து விடக் கூடியவையல்ல தொழிலாளர் பிரச்சினைகள்! ஆனாலும் அரசியல்வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் இதே காரியத்தைத்தான் வருடம் தோறும் செய்து கொண்டு வருகின்றனர்.
மேதின வைபவங்களை எமது அரசியல்வாதிகள் வெறும் அரசியல் மேடையாகக் கருதுகிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.
இலங்கையில் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் கொஞ்சநஞ்சமல்ல…அரசாங்க துறைகளில் கடமையாற்றுகின்ற நிரந்தரத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்களது ஆயுட் காலம் முழுவதும் அரசின் பாதுகாப்புக் குடையின் கீழேயே உள்ளனர். தொழில் பாதுகாப்பு, தொழிலாளருக்கான உரிமைகள், மாதாந்த வேதனம், ஓய்வூதியம், காப்புறுதி என்றெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் விடயங்கள் அவர்களுக்கு தாராளமாகவே இருக்கின்றன.
எனினும் தனியார்துறை ஊழியர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் ஏராளம். நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்களில் பெருமளவானோர் நிரந்தர நியமனத்தைக் கொண்டிருக்கவில்லை. ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு உரித்துடையவர்களாகவும் அவர்கள் இல்லை. மிகக் குறைந்தளவு வேதனத்தில் பணியாற்றுகின்ற அவர்கள் எவ்வேளையிலும் தொழிலை இழக்கக் கூடிய ஆபத்து உண்டு. விடுமுறை சலுகைகளும் அவர்களுக்கு இருப்பதில்லை. அதேசமயம் அவர்களது தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்ற போது, இத்தொழிலாளர்கள் தொழில் எதுவுமின்றி நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிர்க்கதி நிலைமைக்கு உள்ளாகின்றனர்.
இவர்களது நிலைமை குறித்து தொழிற்சங்கங்களோ, அரசியல் கட்சிகளோ பேசுவதில்லை. குறைந்தபட்சம் மேதினத்தில் மட்டுமாவது இத்தகையோரின் அவலங்கள் குறித்து எவரும் பேசுவதில்லை.
எந்தவொரு நிறுவனத்திலும் தொழில் புரிகின்ற ஊழியரானாலும் அவருக்கு ஓய்வுபெறும் காலம் வரை தொழில் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதேசமயம் ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் போன்றவற்றின் பணக் கொடுப்பனவின் மூலம் அவர்கள் தங்களது ஆயுள்வரை பொருளாதார நெருக்கடியின்றி வாழக் கூடியதாக இருத்தல் வேண்டும். இவைதான் தொழிலாளர்களுக்குரிய உண்மையான பாதுகாப்பு ஆகும்.
ஆனால் இவை பற்றியெல்லாம் எவருமே சிந்திப்பதில்லை. தனியார்துறை தொழிலாளர்களின் நலன்கள் உரியபடி பேணப்படுவதில்லையென்பதற்கு சிறந்த உதாரணமாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். வறுமையின் கோரப் பிடிக்குள் சிக்குண்டு, அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அவர்கள் வாழ்கின்ற வாழ்க்கை மிகவும் பரிதாபமானது. இவர்களது துன்பங்கள் மேதினத்தன்று மாத்திரமே பேசக் கூடியவையல்ல.
எமது நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் தங்களது சம்பிரதாய வழக்கங்களை ஒதுக்கி வைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு தடவை கூடிப் பேசுவதைப் பார்க்கிலும், ஆண்டு முழுவதும் தொழிலாளர்களுக்காக அக்கறைப்படுவதற்கு அவை முன்வர வேண்டும்.
2015ம் ஆண்டில் மக்கள் வழங்கிய ஆணையில் முக்கியமானவை இன்னமும் நிறைவேற்றப்படாமல் எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கி ஏமாற்றத்தை அளித்துக்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020 தாம் ஓய்வுபெறப்போவதில்லை நேற்று விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு அவர் மீதான மதிப்பிறக்கத்திற்கே வழிகோலும். 2015ல் பதவியேற்ற போது மீண்டுமாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடமாட்டேன். ஒருதடவை மாத்திரமே பதவியில் இருப்பேன் எனக்கூறிய ஜனாதிபதி இன்று நிறைவேற்றதிகாரத்தின் சுவையை அனுபவித்துக்கொண்டிருப்பதால் அதனை விட்டுவிட மனமில்லை போலும். கண்ணாடிக்கு முன் நின்று தமக்குத்தாமே உண்மையானவர்களா என்பதை இவர்கள் தேடிப்பார்க்க வேண்டும். சொல்வதொன்று செய்வதொன்றாக அமைந்துவிட்ட வழமையான அரசியல் வாதிகளில் தாமும் ஒருவர் என்பதை உறுதிப்படுத்துவதாகவே ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பதவிக்கு வந்த ஆரம்பத்தில் பதவியில் பற்றில்லாதவராக காண்பித்து மக்களதும் சர்வதேசத்தினதும் அபிமானத்தை வென்ற ஜனாதிபதி இன்று நாற்றமெடுக்கும் அரசியல் சாக்கடையில் மூழ்கிக்கொண்டு தனது நற்பெயரையும் விரைந்திழந்து வருவதை அவருடன் இருப்பவர்களாவது உணர்த்துவார்களா?
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.