பிரிட்டிஷ் கொலம்பியா தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு!
In கனடா April 17, 2019 5:17 am GMT 0 Comments 2239 by : Jeyachandran Vithushan

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சால்மன் ஆர்ம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக 25 வயது ஆண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேலோனாவிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் வடக்கே அமைந்துள்ள அந்தத் தேவாலயத்தில், ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், சுமார் 10.30 அளவில் தேவாலயத்தினுள் நுளைந்த துப்பாக்கிதாரி அங்கிருந்த இருவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்.
இதன்போது அங்கிருந்த ஏனையோர் அவரை மடக்கிப் பிடித்தததாக அங்குள்ள கனேடிய மத்திய பொலிஸ் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றையவர் பலத்தகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் மீது உடனடியாக குற்றச்சாட்டுகள் எவையும் பதிவுசெய்யப்படவில்லை எனவும், இது மதரீதியில் உந்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்று நம்பப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவத்தை அடுத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.