மத்தியில் தொடர்ந்தும் கை ஏந்தப் போகிறாயா தமிழா…?
April 14, 2018 7:36 pm GMT
நீரிருக்கும் நாள்வரை நெல்மணி ஓங்குமதில்
ஊரிருக்கும் பாரிருக்கும் ஒத்து
என்பது உலக நடைமுறை.
பல வருடங்களாக காலத்திற்கு காலம் தமிழகதிற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் தலை விரித்தாடும் காவிரி நதி நீர் விவகாரத்தில் இன்றைய பா.ஜ.க. அரசு ஆடிய நாடகம் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் அம்பலமாகியுள்ள நிலையில் மத்திய அரசுக்கும் கர்நாடகதிற்கும் எதிராக தமிழகத்தில் ஆங்கங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன.
உச்ச நீதிமன்றம் அளித்த ஆறு வாரகால அவகாசம் முடிவடைந்த நிலையில் அவசர அவசரமாக ஒரு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், “உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் நாள் அளித்த தீர்ப்பை நாங்கள் படித்துப் புரிந்துகொள்வதற்கே மார்ச் மாதம் முதல் வாரம் வரை ஆகிவிட்டது எனவும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் புதிய சிக்கல்கள் எதுவும் வரக்கூடாதெனச் சொல்லப் பட்டிருக்கிறது. எனவே காவிரி விவகாரத்தைக் கையாளும் திட்டம் (Scheme) பற்றி விளக்கம் அளியுங்கள்” என சுற்றி வளைத்து நீதிமன்றிடம் ஒரு கோரிகை விடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஒப்புகான மனு என சட்ட வல்லுனர்கள் தேர்வித்துள்ளனர்.
“நாங்கள் இந்தத் தீர்ப்பை எழுதுவதற்கு மிகவும் சிரமப்பட்டோம் தமிழ்நாடு – கர்நாடகா இடையே இது தொடர்பாக, இனிமேல் எந்தச் சிக்கலும் வரக்கூடாது என நினைத்தே இந்தத் தீர்ப்பை வழங்கினோம். அதில் ஏதாவது ஐயப்பாடு இருந்தால், தீர்ப்பு வந்தவுடனேயே நீதிமன்றத்துக்கு வரவேண்டியதுதானே…” என தலைமை நீதிபதி மத்திய அரசின் தலையில் ஓங்கி நச்சென்று ஒரு குட்டு வைத்துள்ளார்.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு பல காலம் தள்ளிப் போடப்பட்டு ஒரு வழியாக கால் நூற்றாண்டு இழுபறிக்குப் பின்னரே வெளியானது. இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் தமிழ் நாட்டுப் பயிராளிகள் நிறையவே இழந்துவிட்ட நிலையில் இந்த இறுதித் தீர்ப்புக் கூட ஏற்கெனவே தமிழகதிற்கு கிடைத்து வந்த நதி நீரின் அளவில் மேலும் குறைப்பு செய்துள்ளது. அதையும் கூட உறுதிப்படுத்துவதற்கு மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு காலம் கடத்தும் நிலையில் உள்ளதால்தான் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடித்தன.
இந்தியாவின் தேசியக் கட்சி என்கிற அளவிலும் மத்தியில் ஆளும் கட்சி என்கிற நிலையிலும் நரேந்திர மோடி அரசு ஒரு போதும் செய்திருக்கக் கூடாத செயல் இது என வர்ணிக்கப்படுகிறது. போராட்டங்களை முன்னெடுப்பவை எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் போராட்டங்கள் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை முன்வைத்தே நடக்கின்றன என்பதை அரசாள்வோர் உணரவேண்டும்.
உலகில் மக்கள் குரலுக்குச் செவி கொடுக்காத ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த கதிகள் வரலாற்றில் நிரம்பிக் கிடக்கின்றன. வரலாறு தான் ஆறுகளில் சிறந்த ஆறு என்பார்கள். அந்த வரலாற்றில் தம் பெயரும் இடம் பெற வேண்டுமென நரேந்திர மோடி நினைக்கிறாரோ என்னவோ…?
காவிரிச் சிக்கல் தொடர்பாகப் பேசுவதற்கே அனுமதி மறுக்கும் மோடி, மாமல்லபுரம் அருகே இருக்கும் திருவிடந்தையில் இராணுவத் தளபாடக் கண்காட்சியைத் திறந்து வைக்கவும் சென்னை-அடையாறு புற்றுநோய் மருத்துவமனை விழாவில் பங்கேற்கவும் சென்னை சென்று திரும்பி உள்ளார்.
கருத்துரிமைக்காகவும் சமுக உரிமைக்காகவும் குரல் கொடுப்பவர்களைக் கண்டு கொள்ளாமல், இந்திய வரலாற்றில் இதுவரை யாரும் உண்ணாவிரதம் இருந்ததில்லை என்னும் சாதனையை எட்டிப்பிடித்துள்ளார் மோடி.
உலகத்திலேயே மிகுதிப்பேரால் சமுக வலைத்தளங்களில் பின் தொடர்பவராக கருதப்படுகின்ற மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து அதே சமுக வலைத்தளங்களில் தமிழால், தமிழர்களால் பயன்படுத்திய ”திரும்பச் செல்லுங்கள் மோடி” GO BACK MODI என்னும் உணர்வலை தான் உலகையே கடந்தவாரம் உசுப்பியது.
“தென்றல் புயலானால் செம்மாந் திருந்தவளம்
கொன்று சிதைக்கப் படும்”
என்பதற்கொப்ப அடிமேல் அடி வைத்தால் அம்மியே நகரும்போது, ஐ.பி.எல் கிரிக்கெட் நகராதா…? நகர்ந்திருக்கிறது புனே நகரத்திற்கு…
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் அளித்த கெடு தாண்டியும் நரேந்திர மோடி அரசு காலந்தாழ்த்துவதற்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் பலவேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தமிழ் நாட்டில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்தக் கூடாது. அவற்றை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டுமென்கின்ற குரல்களும் எழுந்து அடங்கியுள்ளன.
இந்தக் குரல்களின் நியாயப்பாடு தொடர்பில் பல வாதப் பிரதி வாதங்கள் எழுந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழ்நாட்டில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கக்கூடாதென உணர்வாளர்கள் எழுப்பிய எச்சரிக்கைக் குரல்களும், நடத்தியே தீருவோம் என ஐ.பி.எல். நிருவாகம் முன்னர் எடுத்த முடிவும் பிரதமரைப் போலவே தமிழ் நாட்டின் முதலமைச்சர்களையும் பாடாய்ப்படுத்திவிட்டன. இறுதியில் ஐ.பி.எல். ஒழுங்கமைப்புக் குழு சோலி வேண்டாம் ஆளை விடு என்பதைப் போல ஏற்கனவே இடம் பெற்ற ஒரு போட்டியைத் தவிர சென்னையில் நடைபெற இருந்த ஏனைய போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும் காவிரித் தண்ணீர் வேண்டி நியாயமான போராட்ட சக்திகளுக்கு கிடைத்த ஒரு உத்வேகமாகவே பார்க்கப்படுகிறது.
உலகை வலம் வருவதில் பெரும் ஆர்வமுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு என்றால் திகில் மாநிலமாகவே காட்சி அளிக்கப்போகிறது என்கின்றார் போராட்ட அமைப்பாளர் ஒருவர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் சென்னை செல்கிறார் மோடி மத்திய இராணுவத்துறைக் கண்காட்சியில் கலந்துகொள்கிறார் என்ற செய்தி ஆத்திர உணர்வுகளை மேலும் அதிகரிக்க செய்தது. அரசியல் கட்சிகள் தொடங்கி தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அமைப்புகள் வரை பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்புகள் வலுத்து ஒலித்தன.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு வரலாறு காணாத வகையில் மக்கள் திரண்டதைப்போல, காவிக்கொடிக்கு நடுக்கத்தை உண்டாக்கிவிட்டன கருப்புக்கொடிகள். இதனைக்கும் மத்தியில் தொடர்ந்தும் கை ஏந்தப் போகிறாயா தமிழா…? என்கின்ற யதார்த்த குரல்களும் எழுகின்றன.
வான்தந்த மழைநீரைத்
தேக்க மறந்தாயே தமிழா..
வழியற்றுக் கையேந்தி
நாதியற்று நிற்கிறாயே தமிழா..
-
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்
ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்...
-
அபிநந்தன் விடுதலையும்… அரசியல் சதுரங்கமும்…
-ஆண்டாள்- இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ...