82 நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
In உலகம் February 2, 2021 9:34 am GMT 0 Comments 1298 by : Dhackshala

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆலோசனை கூட்டமொன்றில் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் இந்த விடயம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா பாதிப்பு 39 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு 9 நாடுகளில் பரவியுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால், இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுடனான தங்களது விமான போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்தன.
இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவானது எளிதில் பரவும் தன்மை கொண்டது என கண்டறியப்பட்டது. இதனால், பிரித்தானியாவில் சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகள் மீண்டும் கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.