காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை
In இலங்கை November 7, 2019 8:08 am GMT 0 Comments 1673 by : Jeyachandran Vithushan

காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் 25வது அமர்வு இன்று (வியாழக்கிழமை) மாநகரசபை மண்டபத்தில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
மாநகரசபை சம்பிரதாய முறையில் ஆரம்பிக்கப்பட்ட சபை அமர்வில் தொடர்ந்து முதல்வரின் அறிவிப்புகள், நிதிக்குழுவின் சிபாரிசுகள், முதல்வரின் முன்மொழிவுகள், மாதாந்த கணக்குக்கூற்று தொடர்பிலான ஆராய்வுகள், மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மட்டக்களப்பில் சில தினங்களாக பனிப்பொழிவு என நம்பப்பட்டது, காற்று மாசடைந்த நிலையென அறியப்பட்டள்ளதாகவும் இது இந்தியாவில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கழிவுகள் காற்றின் ஊடாக மட்டக்களப்பினையும் தாக்கியுள்ளதாகவும் இதன்போது மாநகர முதல்வர் தெரிவித்தார்.
ஆதற்கு அமைய எதிர்காலத்தில் காலநிலைக்கு ஏற்றவாறு சூழலை மாற்றியமைக்க வேண்டிய தேவையிருப்பதாகவும் பலதரப்பட்ட தரப்பினரையும் இணைத்து அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஊடாக செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் முதல்வர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன்போது மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும்,எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்த அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், பொறியியலாளர், கணக்காளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.