BUNDESLIGA கால்பந்து தொடர்: இருபத்து எட்டாவது வார போட்டிகளின் முடிவுகள்
In உதைப்பந்தாட்டம் April 8, 2019 5:52 am GMT 0 Comments 1878 by : Anojkiyan
ஒவ்வொரு நாடுகளில் நடத்தப்படும் தனித்துவமான கால்பந்து லீக் தொடர்களில், அந்நாட்டு முன்னணி கால்பந்து அணிகள் விளையாடுவது வழக்கம்.
அவ்வாறான் 56 ஆண்டுகள் பழமையான புஃண்டர்ஸ்லிகா கால்பந்து தொடர், தற்போது ஜேர்மனியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரில் 27 முறைகள் சம்பியன் பட்டம் வென்று, அசைக்க முடியாத அணியாக பேயர்ன் முனிச் அணி திகழ்ந்து வருகின்றது.
இந்நிலையில் இத்தொடரின் 2018-2019ஆம் ஆண்டு பருவக் காலத்துக்கான தொடர், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
சரி வாருங்கள் இத்தொடரின் இருபத்து எட்டாவது வார போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்க்கலாம்…
இத்தொடரில் அலையன்ஸ் அரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், பேயர்ன் முனிச் மற்றும் போரூஸியா டோர்ட்மண்ட் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை துண்டிய இப்போட்டியில், பேயர்ன் முனிச் அணி 5-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம், 64 புள்ளிகளுடன் பேயர்ன் முனிச் அணி முதலிடத்திற்கு முன்னேறியது. போரூஸியா டோர்ட்மண்ட் அணி 63 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.
இதில், பேயர்ன் முனிச் அணி சார்பில், மெட் ஹம்மல்ஸ் 10ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
நட்சத்திர வீரரான ரோபர்ட் லெவண்டோவ்ஸ்கி, 17ஆவது மற்றும் 89ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தனர்.
மேலும், ஜாவீ மார்டினஸ் 41ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், செர்ஜி க்னப்ரி 43ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
…………..
பே அரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற இன்னொரு போட்டியில், பேயர் லெவர்குசன் அணியும், ஆர்.பி. லெப்ஸிக் அணியும் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஆர்.பி. லெப்ஸிக் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் ஆர்.பி. லெப்ஸிக் அணி சார்பில், மார்சல் சபிட்சர் 17ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
டிமோ வெர்னர் 64ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், எமில் போர்ஸ்பெக் 71ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும் அடித்தனர். மேலும், மத்தீஸ் குன்ஹா 83ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார்.
பேயர் லெவர்குசன் அணி சார்பில், காய் ஹாவர்ட்ஸ் 11ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும், 23ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார.
……………
போரூஸியா பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற இன்னொரு போட்டியில், போரூஸியா மொயின்சென்கிளெட்பெச் அணியும், வெர்டர் ப்ரீமென் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியானது, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இதில், போரூஸியா மொயின்சென்கிளெட்பெச் அணி சார்பில், புளோரியன் நியூஹவுஸ் 49ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
வெர்டர் ப்ரீமென் அணி சார்பில், டேவி கிளாசென் 79ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.