இந்தோனேசியாவில் கூடுதல் பணிச்சுமை – 272 அரசு பணியாளர்கள் உயிரிழப்பு
In ஆசியா April 28, 2019 4:25 pm GMT 0 Comments 2788 by : Jeyachandran Vithushan

இந்தோனேசியாவில் செலவினங்களை குறைப்பதற்காக ஜனாதிபதி பதவி, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு முதல்முறையாக ஒரே நேரத்தில் கடந்த 17ஆம் திகதி தேர்தல் நடத்தபட்டது.
இதில் வாக்கு எண்ணும்போது ஏற்பட்ட பணிச்சுமையால் 272 அரச பணியாளர்கள் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 26 கோடி மக்கள்தொகை கொண்ட இந்நாட்டில் முதல்முறையாக 3 தேர்தல்களும் ஒன்றாக நடத்தப்பட்டன. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட 19.3 கோடி மக்களில் 80 சதவீதம் பேர் இந்த தேர்தல்களில் வாக்களித்தனர்.
ஆனால். இந்தோனேசியாவின் கிழக்கு எல்லையில் இருந்து மேற்கு எல்லை வரையிலான சுமார் 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 8 லட்சம் வாக்குச்சாவடிகளை அமைத்து, வாக்குச்சீட்டு முறையில் போடப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகளை மேற்பார்வையிடுவது கடினமான பணியாக இருந்தது.
இந்நிலையில், தேர்தல்கள் சம்பந்தப்பட்ட கூடுதல் பணிச்சுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்றிரவு வரை 273 பேர் உயிரிழந்ததாகவும் 1878 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசியா தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஆரிப் பிரியோ சுசான்ட்டோ தெரிவித்தார்.
இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஓராண்டு சம்பளத்துக்கு நிகரான பணத்தை இழப்பீடாக அளிக்க தேர்தல் அணியகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தல்களின் முடிவு மே மாதம் 22-ம் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.