ரொறன்ரோவில் விசேட நடவடிக்கை – பொதுமக்களுக்கு மே17 வரை காலக்கெடு
In கனடா May 6, 2019 9:00 am GMT 0 Comments 2578 by : Jeyachandran Vithushan

ரொறன்ரோவில் பொலிஸாரின் விசேட அறிவிப்பினை அடுத்து 504 துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றினுள் 155 கைத்துப்பாக்கிகள் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிகளைக் கையளிப்போருக்கு பணம் வழங்கப்படும் என்று ரொறன்ரோ பொலிஸாரால் அறிவிக்கப்பட்டு 3 வாரத்தினுள் இவை அனைத்தும் தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அந்தவகையில் கைத்துப்பாக்கிகளைக் கையளிப்போருக்கு 350 டொலர்களும், ஏனைய துப்பாக்கிகளைக் கையளிப்போருக்கு 200 டொலர்களும் வழங்கப்படுகின்றன. இந்தத் தொகை சுமார் எட்டு வாரங்களுள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்துடன் இணைந்து தம்மிடம் உள்ள துப்பாக்கிகளைக் கையளிக்க விரும்புவோர், பொலிஸாரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் எனவும், அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு வந்து துப்பாக்கிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்றும் பொலிஸார் கூறினர்.
அத்தோடு நேரடியாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் துப்பாக்கிகளை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றும் பொலிஸார் அறிவித்தனர்.
இதேவேளை பெற்றுக்கொள்ளப்படும் துப்பாக்கிகள் அனைத்தும், அவை இதற்கு முன்னர் ஏதாவது குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று தடயவியல் நிபுணர்களால் ஆராயப்படுகிறது. அவ்வாறு குற்றச்செயல்களுடன் தொடர்பற்ற துப்பாக்கிகள் அழிக்கப்படுகின்றன.
இந்தத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் நடப்பில் இருக்கும் என்றும், இந்தக் காலப்பகுதிக்குள் தம்மிடம் உள்ள துப்பாக்கிகளைக் கையளிக்காதோர் குற்றவாளிகள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல பணம் கொடுத்து துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்ளும் திட்டம் இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது 2,000க்கும் அதிகமான துப்பாக்கிகளும், 2013ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது சுமார் 500 துப்பர்ககிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.