நோர்த் யோர்க் வைத்தியசாலையில் கார் திருடிய குற்றச்சாட்டு – பெண்ணொருவர் கைது
In கனடா May 8, 2019 7:59 am GMT 0 Comments 2751 by : Jeyachandran Vithushan

கடந்த மாதத்தில் நோர்த் யோர்க் வைத்தியசாலையில் பணியாளர்கள் பகுதியிலிருந்து, கார்ச் சாவிகளைத் திருடி, காரை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 27 வயது பெண் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த மாதம் 4ஆம் திகதி காலை 6.30 அளவில் அந்தப் பெண், லெஸ்லி ஸ்ட்ரீட் மற்றும் ஷெப்பார்ட் அவென்யூ கிழக்கு பகுதியில் உள்ள வைத்தியசாலையின் பணியாளர்களது பாதுகாப்புப் பெட்டகங்கள் உள்ள பகுதிக்குள் நுளைந்துள்ளார்.
இதன்பின்னர் அங்கிருந்து கார் சாவிகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களையும் அபகரித்துக்கொண்டு, வைத்தியசாலைக்கு வெளியே சென்று, திருடிய கார் சாவிக்குரிய காரை இனங்கண்டு, அதனை அங்கிருந்து செலுத்திச் சென்றதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை அங்கிருந்து அவர் வங்கி அட்டைகளையும் திருடியதாகவும், அதன்மூலம் மோசடியான நிதிப் பண்டமாற்றுகளையும் அவர் மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவைச் சேர்ந்த 27 வயதான மெலனி பெஸ்கொறோவானி என்பவரைக் கைது செய்தனர்.
அவர் மீது வாகன திருட்டு, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். குறித்த பெண் ஒன்ராறியோவில் இதுபோன்ற மேலும் பல சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று நம்புவதாகவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு இது தொடர்பாக மேலதிக தகவல் அறிந்தோர் தம்மை தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.