மன்னார் மறை மாவட்டத்தில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் தாழ்வுபாடு கிராமத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலய திருவிழா திருப்பலி இன்று (வெள்ளிக்கிழமை) காலை சிறப்பாக இடம் பெற்றது.
கடந்த 9 நாட்கள் நடை பெற்ற நவ நாள் திருப்பலிகளை தொடர்ந்து நேற்று (வியாழக்கிழமை) மாலை வெஸ்பர் நற்கருணை வழிபாடும் அதனைத் தொடர்ந்து நற்கருணை இறையாசீரும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ. விக்டர் சோசை அடிகளாரினால் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி ஜேசுராஜா அடிகளாரின் நெறிப்படுத்தலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் அருட்பணியாளர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவில் புனித சூசையப்பரின் திருச்சுருபம் அலங்கரிக்கப்பட்ட தேரில் இறை மக்களை சூழ்ந்து வலம் வந்து பின்னர் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களினால் இறுதி இறையாசீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதன் போது திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரச, அரசசார்பற்ற உயர் அதிகாரிகளுக்கும், அரசியல் பிரதி நிதிகள், பணியாளர்களுக்கும் பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.