கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டரை இலட்சம் ரூபா வழங்கி கொண்டுவரப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் பலர் கடனாளிகளாக்கப்பட்டனர் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்திற்கேற்ப விரைவான கட்டுமான செலவு- செயற்திறன் கொண்ட கொங்கிறீட் பேனல் நிரந்தர வீடமைப்புத் திட்டத்திற்கான’ அடிக்கல் நடும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வீடமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
ஜனாதிபதியின் தேர்தல் கால வாக்குறுதிக்கு அமைவாக அனைவருக்கும் வீடு என்ற கொள்ளைக்கு அமைவாக நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்திற்கேற்ப விரைவான கட்டுமான செலவு- செயற்திறன் கொண்ட கொங்கிறீட் பேனல் நிரந்தர வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திலும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு இறக்கத்துமுனை ஆகிய கிராமங்களில் இந்த வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டரை இலட்சம் ரூபா வழங்கி கொண்டுவரப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் பலர் கடனாளிகளாக்கப்பட்டனர்.கடந்த ஆட்சிக்காலத்தில் வடகிழக்குக்கு கிடைத்த 65ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டன.
கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களும் இணைந்துகொண்டு அரசாங்கத்தினை பாதுகாத்துக்கொண்டிருந்தபோது இந்த 65ஆயிரம் வீடுகள் வந்தன.நான்கு வருடங்கள் ரணிலை பாதுகாத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இந்த 65ஆயிரம் வீடுகளில் ஆறு வீடுகளை கூட கட்டவில்லையென்பது கவலைக்குரியதாகும்.
தமிழ் தலைவர்கள் கடந்த ஆட்சிக்காலத்தினை பாதுகாத்தது மட்டுமே மிச்சமாகும்.தமிழ் மக்களுக்கான எந்த செயற்பாட்டினையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.கடந்த ஆட்சிக்காலம் தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம்.
16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த அரசாங்கத்தில் எவ்வளவோ விடயங்களை செய்திருக்கமுடியும்.அரசாங்கத்தினையே ஆட்டிப்படைத்திருக்கமுடியும்.ஆனால் செய்யவில்லை.ரணிலை பாதுகாக்கும் வேலையினையே அவர்கள் செய்தார்கள.