நமது நாட்டில் சிறந்ததொரு நிருவாகக் கட்டமைப்பு தற்போது உருவாகியிருக்கின்றது. அதனைச் சிலர் விமர்சிக்காலம். இந்த நாட்டைத் தளம்பல் இல்லாமல் வழிநடத்துகின்ற ஒரு ஜனாதிபதி. அதற்கு ஒரு அத்திவாரமாக எமது பிரதமர் இருக்கின்றார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்வு தொடர்பில் நாங்கள் தொடர்ந்து பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதி, பிரதமர், துறைசார்ந்த அமைச்சர் உட்பட அனைவரிடமும் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். அதேபோல் கிட்டங்கிப் பாலம் உட்பட பல பாலங்கள் தொடர்பிலும் கதைத்துள்ளோம். பாராளுமன்றத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்திற்கு நாங்கள் என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்தோமோ சொன்ன விடயங்கள் அனைத்தும் நடக்கும்.
எமது கட்சியை நாங்கள் பாரிய சக்தியாக வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கான வேலைகளை இலகுவாக்குவதற்கு நிருவாகத்தினைப் பிரித்துக் கொடுத்துள்ளோம். அத்துடன் எமது கட்சிக்கான ஒழுக்கம் மிகவும் முக்கியம். கருணா அம்மான் என்ற பெயர் சும்மா வரவில்லை. எத்தனை போராட்டங்கள் எத்தனை தியாகங்கள் எத்தனை இழப்புகளைக் கடந்து வந்துள்ளோம். அதனை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.
எமது மக்களின் விடிவுக்காக ஆயுதம் தூக்கிப் போராடினோம் அதில் முடிவு காணப்படவில்லை. ஆனால் அரசியல் ரீதியிலாவது அதனைப் பெற்றெடுப்பதற்கான முயற்சிகளை எடுப்போம். அதற்காகத் தான் இந்தக் கட்சியை நாங்கள் ஆரம்பித்து வளர்தெடுத்து திரம்படக் கொண்டு வருகின்றோம். எமது கட்சி ஒரு பலமான, உறுதியான கட்சியாக வளர்ந்து வருகின்றது.
நமக்கு பிரதேசவாதம், இனவாதம் ஒன்றும் வேண்டாம். அந்தளவிற்கு நாங்கள் அல்ல. எங்கெல்லாம் தமிழன் வாழ்கின்றானோ அங்கெல்லாம் நாங்கள் குரல் கொடுப்போம். அந்தக் கொள்கையில் தான் எமது கட்சி வளர்ந்து வருகின்றது.
எவரையும் தனிப்பட்ட ரீதியில் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. கொள்கை ரீதியான பிரச்சினைகள் இருப்பது வேறு விடயம். இன்று நமக்காக எத்தனையோ பேர் உலகம் முழுவதும் இருந்து சிரமப்படுகின்றார்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெளிநாட்டில் வசிக்கும் பல உள்ளங்கள் எமக்கு நிதிப்பங்களிப்பை மேற்கொண்டார்கள். உண்மையில் அவர்களை மறக்க முடியாது. அதேபோல் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கும் முகநூல் போராளிகள் அவர்களையும் மறந்த விட முடியாது.
இவ்வாறெல்லாம் நிறைய சக்திகள் நமக்கு உதவி செய்துகொண்டிருக்கின்றன. எனவே சிறந்த எதிர்காலமொன்று நமக்கு இருக்கின்றது.
மக்களைப் பொருளாதார ரீதயில் வளர்த்தெடுப்பதற்கு நாங்கள் முயற்சியெடுக்க வேண்டும். புதிய புதிய பொருளாதாரத் திட்டங்களைக் கொண்டு வருவோம். நிறைய முதலீட்டாளர்களுடனும் கலந்துரையாடியுள்ளோம்.
எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதுவும் நேர்மையாகப் பெற்றக் கொடுக்க வேண்டும். ஏழை மக்களிடம் காசு கேட்டால் அவர்கள் எங்கு செல்வார்கள்.
நமது நாட்டில் சிறந்ததொரு நிருவாகக் கட்டமைப்பு தற்போது உருவாகியிருக்கின்றது. அதனைச் சிலர் விமர்சிக்காலம். ஆனால், இன்று ஐ.நா பிரச்சினை, கொரோனா பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை போன்ற சிக்கலான கட்டத்தில் இந்த நாட்டைத் தளம்பல் இல்லாமல் வழிநடத்துகின்ற ஒரு ஜனாதிபதி. அதற்கு ஒரு அத்திவாரமாக எமது பிரதமர் இருக்கின்றார்.
இவ்வாறான நிருவாகக் கட்டமைப்புக்குள்ளால் நாம் நிறைய சாதனைகளைப் படைக்கலாம். அரசாங்கத்தை நாம் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் எமது மக்களுக்கான வளங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். மக்களுக்கான நேர்மையாக உழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் பாராட்டுகின்றேன்.
எனவே இந்த சிறந்த வாய்ப்பான சந்தர்ப்பத்தில் எமது கட்சியை வழிநடத்த வேண்டும். இதற்கான பொறுப்புகள் எமது கட்சியின் அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதனைப் புரிந்து கொண்டு அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.