முடிவுக்கு வந்துள்ள கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு மலையகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்ளும் முன்வரவேண்டும் என மஸ்கெலியா பிரதேச சபையின் உப தலைவர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அவ்வாறு செய்தால் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளையும், சலுகைகளையும் உரியவகையில் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
“கொரோனா வைரஸ் தாக்கத்தின் 3ஆவது அலை தற்போது வேகமாக பரவிவருகின்றது. இதனால் மலையக மக்களும் அச்சத்துடன்தான் வாழ்கின்றனர்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் ஏனைய பகுதிகளில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் அரசும், சுகாதார தரப்பும் மந்த கதியிலேயே செயற்படுகின்றன. பி.சி.ஆர். பரிசோதனைகள்கூட முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை.
அத்துடன், நகர்ப்புறங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டுவருகின்றது. ஆனால் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்னும் ஏற்றப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களும் இந்நாட்டின் மக்கள் தான். அவர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்வாகங்களால் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றன. 8 மணிநேரம் தொடர் வேலை உட்பட தொழிற் சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் தொழிற்சங்கங்களையும் ஒடுக்குவதற்கு கம்பனிகள் முயற்சிக்கின்றன.
இதன் ஓர் அங்கமாகவே தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்திலிருந்து சந்தா அறிவிடுவதை நிறுத்தியுள்ளன. சந்தா நிறுத்தப்படுவதை நாம் வரவேற்கின்றோம்.
ஆனால் அந்த போர்வையில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசமாக உள்ள தொழிற்சங்கங்களை ஒடுக்க முற்படுவதை அனுமதிக்க முடியாது.
கூட்டு ஒப்பந்தம் அமுலுக்கு வருவதற்கு முன்னரும் சந்தா அறவிடப்பட்டுள்ளது என்பதை துரைமார் சம்மேளனம் புரிந்துகொள்ள வேண்டும்.” என கூறினார்.