திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
தற்போது நிலவக்கூடிய மொன்சூன் பருவக்காற்று நிலைமை காரணமாக மாவட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளவேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் பற்றி இக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பிரதேச செயலாளர் தலைமையில் அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பிரதேச செயலக ரீதியாக உத்தியோகத்தர்களும் ஏற்படக்கூடிய அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் இது தொடர்பில் கூடிய அவதானத்துடன் செயற்படல் மிக முக்கியமானது. மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி அதிகார சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் காணப்படுகின்ற வடிகான்களை தூய்மைப்படுத்துவது மிக இன்றியமையாததாக காணப்படுகின்றது. சில பிரதேசங்களில் வடிகான்கள் மூடப்பட்டு காணப்படுவதன் காரணமாக மழையினால் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.
எனவே உள்ளூர் அதிகார சபை நிறுவனங்கள் வடிகாண்களை துப்பரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் ஏனைய நிறுவனங்களும் தங்களுடைய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று இதன்போது அரசாங்க அதிபர் உரிய அதிகாரிகளிடம் வேண்டிக்கொண்டார்.
மாவட்டத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மக்களைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை முப்படை மற்றும் பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்களை இணைத்துக்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பி.ஆர்.ஜயரத்ன, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ், பிரதேச செயலாளர்கள், முப்படை, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.