ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பெருநகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்ளும் நாட்டின் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தில் யாழ். மாவட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நாவற்குழி நகரத்தின் அபிவிருத்தி பணிகள், உத்தியோகபூர்வமாக திட்டத்தின் பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவுக்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருபிரதேசத்தை பல்பரிமாண நகராக்குவதற்கு முதற்கட்டமாக 20 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
இத்திட்டத்தின் யாழ் மாவட்டத்துக்கான முன்மொழிவுகள், அங்கஜன் இராமநாதனில் முன்வைக்கப்பட்டதுடன், கடந்த ஜூலை 17ம் திகதி மற்றும், ஆகஸ்ட் 31ம் திகதி ஆகிய தினங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மேலும் இத்திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்தில் வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம், நெல்லியடி மற்றும் மருதனார்மடம் ஆகிய பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு முதற்கட்டமாக வேலணை, கொடிகாமம், நாவற்குழி, மருதனார்மடம் ஆகிய 4 பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.