நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால் நடைகளை அதன் உரிமையாளர்கள் ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரவை களுக்கு மாத்திரமே கொண்டு செல்ல வேண்டும் எனவும்,கால்நடைகள் உரிய சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தடுப்பூசி ஏற்றப்பட்டு,மாடுகளுக்கு தோடு அணிவிக்கப்பட்டு காணப்பட வேண்டும் என நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.கிரிஸ் கந்தகுமார் தெரிவித்தார்.
நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள்,பிரதிநிதிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர் சங்கத்துடன் நேற்று (திங்கட்கிழமை) நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ கட்டுக்கரை குளத்தின் கால போகம் தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாடுகளை ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரவை களுக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர் சங்கம் ஆகியோருடன் நேற்று நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது நானாட்டான் பிரதேசத்தில் உள்ள மாடுகளை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரவை பகுதிக்கு கொண்டு செல்வது தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக கொண்டு செல்லப்படுகின்ற மாடுகள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தடுப்பூசி ஏற்றப்பட்டு,மாடுகளுக்கு தோடு அணிவிக்கப்பட்டு காணப்பட வேண்டும் என்பதோடு,குறித்த மாடுகள் நானாட்டான் பிரதேச செயலகத்தினால் அனுமதிக்கப்பட்டு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
மாடுகளை கொண்டு செல்கின்றவர்கள் பாலியாறு கிராம அலுவலர் பிரிவில் தேத்தாவடி கிராமத்திற்கு கிழக்குப் பக்கமாக உள்ள ‘பெரு வெளி’ பகுதியில் மாத்திரமே கால் நடைகளை வைத்திருத்தல் வேண்டும்.
ஏனைய இடங்களாக பட்டி வெளி,பள்ளத்து வெளி,குடா வெளி,வெள்ளங்குடா போன்ற இடங்களில் மாடுகளை வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
பட்டிவெளியில் மாடுகளை வைத்துள்ளமை தொடர்பாக முகாமை செய்வதற்கு தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தப்பட்ட அறிவுறுத்தல்களையும் மீறி மாடுகளை வைத்திருந்து குறித்த பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் அடுத்த கால போகத்தில் குறித்த மாடுகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது.
மேலும் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள மாடுகளை தேத்தாவாடி பகுதிக்கு கொண்டு செல்ல இருந்தாலும் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள அனைவரும் தமது மாடுகளை தேத்தாவாடிக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
புல்லறுத்தான் கண்டல் பிரதேசம் இம்முறை மேய்ச்சல் தரவைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த புல்லறுத்தான் கண்டல் பிரதேசத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுமார் 354 ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் தமக்கு என ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரவை பகுதிக்கு தமது கால் நடைகளை கொண்டு செல்ல முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.