மன்னார் நகர சபைக்கு உற்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் மன்னார் நகர சபை தன்னிச்சையாக முன்னெடுத்த வீதி அபிவிருத்தி பணிகளின் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மன்னார் நகர சபையினால் திடீர் என கிராம மக்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பொது அமைப்புக்களின் எவ்வித ஆலோசனைகளும் இன்றி தன்னிச்சையாக நகர சபை இவ்வருட அபிவிருத்திக்கான நிதியை செலவு செய்யும் வகையில், நகர சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக மன்னார் நகர சபைக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி வீதி, குரூஸ் கோவில் வீதி, மூர்வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வீதிகளில் கிரவல் மண் கொட்டப்பட்டு வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் மன்னார் நகர சபை தன்னிச்சையாக வருட இறுதி முடிவில் நிதியை செலவு செய்யும் நோக்குடன் தொழில்நுட்ப உத்தியோகத்தர் களின் வழி நடத்தல் இன்றி குறித்த பகுதிகளில் உள்ள வீதிகளுக்கு அளவு கணக்கு இன்றி கிரவல் மண் கொட்டியுள்ளனர்.
எனினும் வடிகான் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மன்னார் நகர சபை மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில்,நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக மன்னார் மூர்வீதி பகுதியில் மன்னார் நகர சபையினால் கிரவல் மண் போடப்பட்ட வீதிகளுக்கு அருகாமையில் உள்ள பல வீதிகளினுள் மழை நீர் தேங்கியுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மன்னார் நகர சபையின் தலைவர் உள்ளிட்ட நகர சபையின் செயலாளர் ஆகியோர் தன்னிச்சையான நடவடிக்கை காரணமாகவும், திட்டமிடாத வீதி அபிவிருத்தி பணிகள் காரணமாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளதோடு,நீண்ட கால பிரச்சனை தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.