மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பெய்து வந்த கடும் மழை அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை பேசாலை பகுதியில் பாரிய சிரமதானம் இடம் பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் சிறுத்தோப்பு, காட்டாஸ்பத்திரி , பேசாலை , முருகன் கோவில் பகுதி, பேசாலை 100 வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் தொடர்ந்தும் வீடுகளில் தோங்கி உள்ளது.
குறித்த பகுதிகளில் உள்ள பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இன்று வரை உறவினர்கள்; வீடுகளில் வாழ்ந்து வரும் நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக குறித்த பகுதிகளில் வெள்ள நீர் ஓடுவதற்கான இயற்கையாக காணப்பட்ட ஓடைகள் மற்றும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களால் முன்னெடுக்கப்பட்ட வடிகால் வசதி மற்றும் காற்றாலை நிர்மாணம் போன்றவற்றினால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ள நீர் வெளியேற முடியாத நிலை காணப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த கிராம பகுதிகளில் டெங்கு நோய் அபாயம் மற்றும் நோய்த்தொற்றுகள் அதிகரித்து காணப்படுகிறது. பேசாலை பிரதேச பகுதியில் நேற்று வரை 90 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்த நிலையில் பேசாலை கிராம மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமது கிராமங்களில் பாரிய சிரமதானப்பணியை முன்னெடுத்தனர்.
கிராம மக்களுடன் கடற்படை, இராணுவத்தினர் கலந்து கொண்டிருந்தனர். கிராமத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மதுபான வெற்றுப் போத்தல்கள் மற்றும் நுளம்பு பெருக்கக் கூடிய பல்வேறு கழிவு பொருட்கள் கிராம மக்களால் சிரமதானப் பணி மூலம் அகற்றப்பட்டது.
கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட பாவனைக்கு உட்படுத்தப்படாத மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன நோய்த் தொற்றுக்கான காரணிகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக குறித்த சிரமதானப்பணி இடம் பெற்றது.