ஜனாதிபதியின் சௌபாக்கிய தூர நோக்கு செயற்றிட்டத்தின் கீழ் இலங்கையின் 584வது பொலிஸ் நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இந்த பொலிஸ் நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே 13பொலிஸ் நிலையங்கள் உள்ள நிலையில் 14வது பொலிஸ் நிலையமாக இந்த பொலிஸ் நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகரவின் வழிகாட்டலின் கீழ் அமைக்கப்பட்ட இந்த கொக்குவில் பொலிஸ் நிலையத்தின் திறப்பு விழா மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் கமல் சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி,உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்,பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
சமய தலைவர்களின் அனுஸ்டானங்களை தொடர்ந்து பொலிஸ் நிலையம் திறந்துவைக்கப்பட்டதுடன் விசேட தேவையுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் குடும்பத்திற்காக சக்கர நாற்காலி வழங்கப்பட்டதுடன் பொலிஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.