இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டமை, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றமைக்கு எதிராக பிரகடனப்படுத்துப்பட்டுள்ள ‘கறுப்பு ஜனவரி’ தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மெழுகுதிரி ஏந்தி தமது கோரிக்கையினை முன்வைக்கப்படவுள்ளதுடன் துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உயிர்நீர்த்த ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகே இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அனைவரும் கைகளில் மெலுகுவர்த்தியை ஒளிரச்செய்து ஊடகவியலாளர்களின் நியாயமான கோரிக்கையினை கோரி நின்றதுடன் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்யும் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு.ஊடக அமையம், அம்பாறை மாவட்ட ஊடக அமையம்,மட்டக்களப்பு மாவட்ட தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம்,கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
இந்த நிகழ்வில் ஊடவியலாளர்கள்,மதத்தலைவர்கள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
“படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, தாக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்’ என்பதே இவ்வருடத்திற்கான கறுப்பு ஜனவரியின் தொனிப்பொருளாக கொண்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.