நோர்வே நாட்டின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி டிரைன் ஜோரான்லி எஸ்கெடல் (Trine Joranli Eskedal) இன்று (வியாழக்கிழமை) மன்னாருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்த நோர்வே நாட்டின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி (தூதுவர்) இன்று (வியாழக்கிழமை) காலை 8.45 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன் போது தூதுவர் வரவேற்கப்பட்டு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் மற்றும் சந்திப்பு இடம் பெற்றது.
மன்னாருக்கு வருகை தந்த நோர்வே தூதுவர் மன்னாரில் இடம் பெறும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தார்.
தொடர்ந்து மன்னாரில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார். மன்னார் மாவட்டத்தில் பெண்கள் அபிவிருத்தி தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாகவும் மாவட்ட பெண்களின் நிலை குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
மேலும் மன்னார் பகுதிகளில் இந்திய மீனவர்களின் பிரச்சனை , பறவைகள் சரணாலயம் , காற்றாலை மின்சாரம் , கழிவு மீன் திரவ உரம் தயாரிப்பு, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.