தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 200 வருடங்கள் பழமையான ஆல மரக் கிளையொன்று விழந்தால் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளுக்கு அமைய ஆசிரியரின் மரணத்துக்கு பொறுப்ப கூற வேண்டியவர்களை ஒரு மாதத்திற்குள் அடையாளம் காணும் வகையில் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை – லிந்துலை நகர சபையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஆசிரியரின் உயிரிழப்பு தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலின் போதே பொலிஸார் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளனர்.
இந்த கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், மரமொன்றை வெட்டும் போது கையாள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மேற்படி சம்பவத்தின் போது கையாளப்படவில்லை என கூறினார்.
மேலும் சம்பவத்திற்கு காரணமான நிறுவனம் அல்லது நபர்கள் குறித்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் மேற்படி கூட்டத்ததில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நுவரெலிய பிரதேச செயலாளர் விதுர சம்பத், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், தலவாக்கலை – லிந்துலை நகர சபைத் தலைவர் எல்.பாரதிதாசன், நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் அதிகாரி மற்றும் தலவாக்கலை – லிந்துலை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்தக் கொண்டனர்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள அறுவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் வே.மகேஸ்வரன் என்ற 39 வயதான அசிரியர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடதக்கது.
இந்த சம்பவத்திற்க நீதிகோரி பிரதேச மக்கள் வீதிமறியல் போராட்டம் ஒன்றையும் சம்பவ தினத்தன்று மாலை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் பொலிஸார் வழங்கிய உறுதி மொழிக்கமைய மேற்படி போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.